தஞ்சை:
தஞ்சை அருகே வல்லம் மின்நகர் பகுதியைச் சேர்ந்தவர் முபாரக்(25). இவரது தந்தை புருணை நாட்டில் பள்ளிக்கூடம் நடத்தி வருகிறார். இந்நிலையில், அப்பள்ளியில் கோயம்புத்தூரைச் சேர்ந்த திருமணமான பெண் ஒருவர் பணியாற்றி வந்துள்ளார். முபாரக்கிற்கும் அப்பெண்ணிற்கும் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் அது தகாத உறவாக மாறியுள்ளது. இருவரும் அடிக்கடி தனிமையில் உல்லாசமாக இருந்துள்ளனர். அதை ரகசிய காதலிக்கு தெரியாமல் தனது மொபைலில் வீடியோவாக எடுத்து வைத்திருக்கிறார். நாட்கள் கடந்துபோகக் காதலியுடன் உல்லாசம் இருக்கும் வீடியோவை வைத்து அவரை மிரட்ட தொடங்கியிருக்கிறார், முபாரக்.
வீடியோவை வைத்து மிரட்டி அடிக்கடி பணம் பறித்து வந்துள்ளார். இதற்கிடையே, தஞ்சையில் உள்ள தனது நண்பர்களின் வங்கி கணக்கிற்கு பணம் போட சொல்லி முபாரக் மிரட்ட, கடந்த நவம்பர் மாதம் ரூ40 ஆயிரம் பணத்தையும் அப்பெண் போட்டிருக்கிறார். அதோடு முடிந்துவிடும் என்று நினைத்துக்கொண்டிருக்கும் போது முபாரக்கின் ஆட்டம் தீவிரமானது. நெருக்கமாக உள்ள வீடியோவை உன் கணவருக்கு அனுப்பி விடுவேன். சமூக வலைதளங்களில் பரப்பி விடுவேன் என்று கூறி வந்துள்ளார். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான பெண் தற்கொலை செய்து கொள்ளும் முடிவுக்கு வந்துள்ளார்.
ஆனால், குடும்பத்தை நினைத்து மனதை தேற்றி கொண்ட பெண், வல்லம் போலீசில் இதுகுறித்து புகார் செய்துள்ளார். இதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் பொறுப்பு மோகன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து முபாரக்கை பிடித்து விசாரித்தனர். அதில் ரகசிய காதலிக்கு கொடுத்த டார்ச்சர் நிரூபிக்கப்பட்டது. இதனையடுத்து முபாரக்கை கைது செய்த போலீசார் மேலும் வழக்கில் தொடர்புடைய தினேஷ், மற்றொரு தினேஷ் ஆகிய மூன்று பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.