‘என் சாவுக்கு திமுக ஒன்றிய கவுன்சிலர்தான் காரணம்’ - உயிரை விட்ட கிராம ஊராட்சி செயலாளர்..!

வேலூர்:

வேலூர் மாவட்டம் ஒடுக்கத்தூர் அடுத்த இராமநாயினிகுப்பம் கிராம ஊராட்சி செயலாளராக இருந்தவர் ராஜசேகர். 39 வயதான இவர் நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். பதறிப்போன உறவினர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையே, ராஜசேகர் தற்கொலைக்கு முன் ஒரு கடிதம் எழுதி வைத்து உயிரை விட்டிருக்கிறார். அக்கடிதத்தில், மனைவி ’காந்திமதி என்னை மன்னித்துவிடு, நான் உன்னைவிட்டுப் போகிறேன். குழந்தையை பத்திரமா பார்த்துக்கொள்’ எனது இந்த முடிவுக்கு கவுன்சிலர் ஹரிதான் காரணம், வேறு யாரும் காரணம் இல்லை என குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், கடிதத்தோடு வேப்பங்குப்பம் காவல் நிலையம் சென்ற ராஜசேகரின் உறவினர்கள் போலீசில் புகாரளித்தனர். ஊராட்சிக்கு வரும் நிதியை தனக்கு வழங்க வேண்டும் என கவுன்சிலர் ஹரி தொடர்ந்து ராஜசேகரை வற்புறுத்தி வந்ததாகவும், ராஜசேகரின் தம்பிக்கு ரேசன் கடையில் வேலை வாங்கி தருவதாக இரண்டரை லட்சம் பணத்தை பெற்றுக்கொண்டு அலைக்கழித்ததாகவும் தெரிவித்தனர்.

கொடுத்த பணத்தை திரும்ப கேட்ட போதெல்லாம் ஒழித்துவிடுவேன், வேலையிலிருந்து தூக்கி விடுவேன் என மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது. இதில் கடும் மன உளைச்சலுக்கு ஆளான ராஜசேகர், தனது வீட்டிலேயே தூக்கிட்டு பரிதாபமாக இறந்துபோனார். இந்நிலையில் ராஜசேகரனின் தற்கொலைக்கு காரணமான திமுக ஒன்றிய கவுன்சிலர் ஹரியை கைது செய்யக் கோரி அவரது உறவினர்கள் வேப்பங்குப்பம் காவல் நிலையம் எதிரே திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த வேலூர் எஸ்பி ராஜேஷ் கண்ணன் உயிரிழந்த ராஜசேகரின் மனைவி கோமதி மற்றும் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

தனது கணவர் தற்கொலைக்கு காரணமாக திமுக 17 வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் ஹரியை கைது செய்ய வேண்டும் எனவும், அதுவரை தனது கணவரின் உடலை வாங்க மாட்டோம் எனவும் ராஜசேகரனின் மனைவி உறுதியாக நின்றார். இதனை அடுத்து ஒன்றிய கவுன்சிலர் ஹரி மீது பட்டியலினத்தவர் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வேப்பங்குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை துவக்கியுள்ளனர். விசாரணையில் முடிவில்தான் கிராம ஊராட்சி செயலாளர் ராஜசேகரின் தற்கொலைக்கு காரணமான மர்ம முடிச்சுகள் அவிழ்க்கப்படும் என்று போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒன்றிய கவுன்சிலர் தொல்லை கொடுத்ததால் மனமுடைந்து போன கிராம ஊராட்சி செயலாளர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் வேலூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

-Gowtham Natarajan

Previous Post Next Post

Post Ads 1

Post Ads 2

Kaspersky Premium

Champions don't take risks, why should you?