பிரதமர் நரேந்திர மோடி நாளை சென்னை வருவதையொட்டி தமிழகம் முழுவதும் ரயில் நிலையங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி நாளை ஹைதராபாத் மற்றும் சென்னைக்கு பயணம் மேற்கொள்ளவிருக்கிறார். காலை ஹைதராபாத்தில் உள்ள இந்தியன் ஸ்கூல் ஆஃப் பிசினஸ் கல்வி நிறுவனத்தின் 20-ஆவது ஆண்டு விழாக் கொண்டாட்டத்தில் பிற்பகல் 2 மணியளவில் பிரதமர் பங்கேற்கிறார். அதையடுத்து முதுநிலை மாணவர்களுக்கான பட்டமளிப்பு விழாவில் சிறப்புரையாற்றுகிறார். ஹைதராபாத்தில் இந்நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு மாலை 5:45 மணியளவில் சென்னைக்கு வரவுள்ளார்.
சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெறும் நிகழ்ச்சியில், தேசிய நெடுஞ்சாலை துறையின் புதிய திட்டங்கள், ரயில்வே துறையின் புதிய திட்டங்கள் என ரூபாய் 31 ஆயிரத்து 400 கோடி மதிப்பிலான 11 திட்டங்களுக்களுக்கான பணிகளை அடிக்கல் நாட்டி பிரதமர் மோடி துவங்கி வைக்கிறார். இதையொட்டி தமிழகம் முழுவதும் ரயில் நிலையங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் மூன்றடுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது என்று ரயில்வே காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.