Self Defence : பெண்களுக்கான தற்காப்பு வழிமுறைகள்..!

முதலில் பெண்கள் யாருமில்லாத இடங்களில் இருப்பதைத் தவிர்க்க வேண்டும். சில நூலகங்கள் மிகப் பெரியவையாக அதிக ஆள் நடமாட்டம் இல்லாததாக இருக்கும்.

அப்படிப்பட்ட இடங்களுக்கு எல்லாம் பெண்கள் தனியாகப் போகக் கூடாது. அதுபோல அலுவலகத்திலும் கூட தனியாக இருக்கும் சந்தர்ப்பங்களைத் தவிர்க்க வேண்டும்.

ஷாப்பிங் போகும் போது இருசக்கர வாகனத்தை, காரை ரொம்ப தூரமான இடத்தில் நிறுத்திவைத்துவிட்டுச் செல்லக் கூடாது.

ஷாப்பிங் முடித்து விட்டு வர நேரமாகிவிட்டால் தனியாகச் சிறிது தூரம் நடந்து சென்று வாகனத்தை எடுக்க வேண்டும். அப்போது எது வேண்டுமானாலும் நிகழலாம்.
பொது இடங்களில், பார்ட்டிகளில் பெண்கள் தாங்கள் குடிக்க இருக்கிற குளிர்பானத்தை உடனே குடித்துவிட வேண்டும். மேஜையில் வைத்துவிட்டுச் சற்று எழுந்து போனால்கூட அதில் மயக்க மருந்தோ, வேறு எதையோ பிறர் கலந்து வைத்துவிட வாய்ப்புண்டு.

இப்போது கால்சென்டர், பிபிஓ போன்றவற்றுக்கு பெண்கள் வேலைக்குப் போக வேண்டியிருக்கிறது. நள்ளிரவில் கூட நிறுவனம் ஏற்பாடு செய்யும் வாகனத்தில் வேலைக்குப் போக வேண்டியிருக்கிறது.

அல்லது அலுவலகத்தில் வேலை முடிந்து நேரம் கழித்து வீட்டிற்கு வர வேண்டியிருக்கிறது.
அப்போது காரில் ஏறும் முன்பு பெண்கள் டிரைவரை முதலில் கவனிக்க வேண்டும். அவர் குடித்திருக்கிறாரா என்பதை அவர் கண்களைப் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம். காரில் டிரைவருக்குப் பக்கத்தில் சம்பந்தமில்லாத ஆள் யார் உட்கார்ந்திருந்தாலும் காரில் ஏறக் கூடாது. அந்த ஆள் காரில் இருந்தால் நான் காரில் வரமாட்டேன் என்று உறுதியாகச் சொல்லிவிட வேண்டும்.

காரில் ஏறி உட்கார்ந்தவுடன் செல்போனைக் கையில் எடுத்துப் பேச ஆரம்பிக்கக் கூடாது. இடையில் யார் காரில் ஏறுகிறார்கள் என்பதையும் கவனிக்க வேண்டும். கார் செல்லும் பாதையை நன்கு தெரிந்து வைத்திருக்க வேண்டும். வேறுபாதையில் கார் செல்லுமானால் அதை உரிய நேரத்தில் போன் மூலம் பிறருக்குத் தெரிவிக்க வேண்டும். காரில் செல்லும் போது தூங்கக் கூடாது.

பஸ்ஸில் போகும் போது ஆண்களின் பால்ரீதியான தொந்தரவுக்குள்ளாக நேரிடுகிறது. இதைச் சண்டை போடாமல் சமயோசிதமாகச் சமாளிக்க முடியும். உதாரணமாக பெண்ணின் பக்கத்தில் உட்கார்ந்திருக்கும் ஆண் தொந்தரவு கொடுக்கும் போது வாந்தி வருவது போல நடித்தால் அந்த ஆண் தள்ளி உட்கார்ந்து கொள்வான்.

இப்படி சமயோசிதமாக நடந்து கொள்வதற்கு முக்கியத் தேவை, எப்போது வேண்டுமானாலும் பாதிப்பு வரலாம் என்ற எச்சரிக்கை உணர்வுதான். அடுத்து உணர்ச்சிவசப்படாமல் நிலையை எப்படிச் சமாளிப்பது என்ற அறிவு.
பெண், ஆணின் தாக்குதலில் இருந்து தப்பித்து ஓடி தன்னைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். அவ்வாறு தப்பிக்கும்போது ஆணைத் தாக்க வேண்டிய தேவையிருந்தால் நிச்சயமாகத் தாக்க வேண்டும்.

பின்னாலிருந்து பிடிக்கும் ஆணின் முன்பாதத்தில் ஓங்கி மிதிக்க வலி தாங்கமாட்டாமல் அவன் பிடியை விட்டுவிடுவான். காலால் அவனின் முழங்காலுக்குக் கீழ் உள்ள பகுதியில் ஓங்கி உதைத்தாலும் விட்டுவிடுவான்.

அதுபோல பெண்ணிடம் தகாத முறையில் நடந்து கொள்ளும் ஆணிடம் இருந்து தப்பிக்க அவன் பிடியிலிருந்து விடுவித்துக் கொண்டு சிறிது தூரம் முன்னோக்கி ஓடி பின் சட்டென்று திரும்பி அவனைத் தாக்க வேண்டும்.

ஆணை விட பெண்கள் உடல்ரீதியில் வலிமை குறைந்தவர்கள் தான் என்றாலும் எளிதில் தாக்கும் முறைகளை பெண்கள் அறிந்து கொள்ள வேண்டும்.

Previous Post Next Post

Post Ads 1

Post Ads 2

Travel with us!

News Editor's/Reporter's can join with our Desk Team. Publish your news now on 24×7. Reachout with your contact through editor@ipdtamil.com