சென்னை:
சென்னை புது வண்ணாரப்பேட்டையில் ரவுடி வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை புதுவண்ணாரப்பேட்டை பகுதியிலுள்ள தியாகி பெருமாள் சாலையில் தண்டையார் நகர் பகுதியைச் சார்ந்த ஜீவன் குமார் (26) என்பவர் நடந்து சென்று கொண்டிருக்கும் பொழுது திடீரென வந்த மர்ம கும்பல் ஜீவன் குமாரை சரமாரியாக வெட்டி சாய்த்தனர்.
மர்ம கும்பல் வெட்டி தாக்கிவிட்டு மின்னல் வேகத்தில் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டனர் உடனடியாக அருகில் இருந்தவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் புதுவண்ணாரப்பேட்டை காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.
ரத்த வெள்ளத்தில் துடித்துக் கொண்டு இருந்த ஜீவன் குமாரை ஆம்புலன்ஸ் மூலமாக ராயபுரம் அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் சிகிச்சை பலனின்றி ஜீவன் குமார் உயிரிழந்தார்.
ஜீவன் குமார் மீது எண்ணூர் காசிமேடு உள்ளிட்ட பகுதிகளில் கொலை முயற்சி திருட்டு உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது தெரிய வந்தது. மேலும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு முன்பகை காரணமாக ஒருவரை தாக்கி வெட்டிய வழக்கில் சிறைக்கு சென்று திரும்பி வந்த நிலையில் ஜீவன் குமாரை நோட்டமிட்ட மர்ம கும்பல் வெட்டி உள்ளதும் தெரிய வந்துள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக புது வண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் சம்பவ இடத்திற்கு துணை ஆணையாளர் சுந்தரவதனம் மற்றும் உதவி ஆணையாளர் உக்கிரபாண்டியன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.