சென்னை:
சென்னை விமான நிலைய சரக்கு முனையத்தில் வெளிநாடுகளுக்கு அனுப்பவிருந்த பார்சல்களை வழக்கம் போல் சுங்கத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது அமெரிக்காவுக்கு அனுப்பவிருந்த ஒரு பார்சலை ஆய்வு செய்ததில் அதில் நாக பரணத்துடன் கூடிய பித்தளையால் ஆன சிவலிங்க சிலை இருந்தது தெரியவந்தது. சிலை யார் அனுப்பியது என்பது குறித்து விசாரித்தனர். கும்பகோணத்தில் உள்ள கலை கைவினை பொருள் விற்பனை மையத்தில் வாங்கப்பட்டதாக பார்சலின் மேலே குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும், சிவலிங்கம் பழமையானது அல்ல என்பதற்கான தொல்லியல்துறை சான்றை இணைக்காமல் இருந்ததால் சுங்க இலாகா அதிகாரிகள் சந்தேகமடைந்தமடைந்தனர். உடனே அதுகுறித்து இந்தியத் தொல்லியல் துறையினருக்கு தகவல் கொடுத்திருக்கிறார்கள்.
இதனையடுத்து தகவலறிந்து விமான நிலையத்திற்கு வந்த தொல்லியல் துறை அதிகாரிகள் சிவலிங்கத்தை முழுமையாக ஆய்வு செய்தனர். அதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன. அமெரிக்காவுக்கு கடத்தவிருந்த சிவலிங்கம் 1,800 முதல் 2,000 ஆண்டுகள் வரை பழமையானது என்பதை தொல்லியல் துறையினரால் கண்டறியப்பட்டது. 36 செ.மீ.உயரமும் 4.56 கிலோ எடையுள்ள பித்தளையால் ஆன இந்த சிலை விலை மதிப்பற்றது எனவும் பல கோடிகளை கூட தாண்டலாம் என்றும் தொல்லியல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இந்நிலையில் சிவலிங்கத்தை அமெரிக்காவுக்கு அனுப்ப சுங்கத்துறை அதிகாரிகள் தடை விதித்து பாதுகாப்பில் எடுத்து சென்றனர்.
விசாரணையில் கடத்தப்பட இருந்த சிவலிங்க சிலை கள்ளக்குறிச்சி மாவட்டம் திருநாவலூர் அருகே உள்ள கெடிலம் என்ற இடத்திலிருந்து கடத்தி வரப்பட்டது தெரியவந்தது. தொடர்ந்து சிலையை வெளிநாட்டுக்கு கடத்த முயன்ற கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். பழங்காலம் தொட்டே நம்முடைய கலாச்சாரம் தொடர்பான பொருட்களும், சாமி சிலைகளும் வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்டு வருகிறது. இதனால் எக்கச்சக்க பொக்கிஷங்களை நாம் இழந்துள்ளோம். இதற்கு நிரந்தரமாக முடிவுகட்ட வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.