தஞ்சை:
தஞ்சை மாணவி தற்கொலை விவகாரத்தில், ஊர்மக்களையும் மதம் மாறச் சொன்னதாக கூறுமாறு நிர்பந்திக்கின்றனர் என மைக்கேல்பட்டி கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
எல்லா மதத்தினரும் ஒற்றுமையாக உள்ளோம்; பள்ளி நிர்வாகம் மதம் மாறச் சொன்னதாக கூறுமாறு சிலர் ஊருக்குள் வந்து நிர்பந்திக்கின்றனர் என மைக்கேல்பட்டி கிராம மக்கள் தஞ்சை மாவட்ட ஆட்சியரிடம் புகார் கடிதம் கொடுத்துள்ளனர். அதில், ‘எங்கள் ஊரில் சுமார் 800 குடும்பங்கள் வசித்துவருகின்றனர். இதில் இந்துக்கள், கிறிஸ்துவர்கள், முஸ்லீம்கள் அடங்குவர். நாங்கள் தற்போதுவரை மதம் கடந்து ஒற்றுமையாக சகோதரத்துவடனும் ஒரே ஊரில் மத நல்லிணக்கத்தோடு வாழ்ந்துகொண்டிருக்கிறோம். இதுவரைக்கும் மத சம்பந்தமான எந்த ஒரு பிரச்சினையும் நடந்தது இல்லை. எங்களது பிள்ளைகளும் அந்த பள்ளியில் தான் படித்தனர், அதுவரை மதம் மாற்றம் என்ற பேச்சுக்கே இடமில்லை, நாங்கள் ஒற்றுமையாக இருக்கிறோம். இந்நிலையில் பள்ளி நிர்வாகம் மதம் மாறச் சொன்னதாக கூறுமாறு சிலர் ஊருக்குள் வந்து நிர்பந்திக்கின்றனர்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.