மேலும் 4 ஆட்டுக்குட்டிகளைக் காணவில்லை - சிக்கனம்பட்டி கிராம மக்கள் பீதி: கால்நடை மருத்துவர் ஆய்வு!
சேலம்: சேலம் மாவட்டம் ஓமலூர் அடுத்த சிக்கனம்பட்டி பகுதியில் மர்ம விலங்கு கடித்து 4 ஆடுகள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆடுகளைக் கொன்றதுடன், ஆட்டுக்குட்டிகளையும் மர்ம விலங்கு தூக்கிச் சென்றதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
நடந்தது என்ன?
ஓமலூர் அருகே உள்ள சிக்கனம்பட்டி காலனியைச் சேர்ந்தவர் முருகன். இவரது மனைவி தாமரை வாணி. இந்த தம்பதியினர் தங்களது வாழ்வாதாரத்திற்காக 15-க்கும் மேற்பட்ட செம்மறி ஆடுகளை வளர்த்து வருகின்றனர். நேற்று இரவு ஆடுகளை வழக்கம்போல் பட்டியில் அடைத்துவிட்டு உறங்கச் சென்றனர்.
இன்று காலை பட்டிக்குச் சென்று பார்த்தபோது, அங்கிருந்த ஆடுகள் ரத்த வெள்ளத்தில் பிணமாகக் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். மர்ம விலங்கு ஒன்று நள்ளிரவில் புகுந்து ஆடுகளைக் கடித்துக் குதறியுள்ளது. இதில் 4 செம்மறி ஆடுகள் சம்பவ இடத்திலேயே பரிநாபமாக உயிரிழந்தன.
காணாமல் போன குட்டிகள்:
உயிரிழந்த ஆடுகள் தவிர, பட்டியில் இருந்த 4 ஆட்டுக்குட்டிகளைக் காணவில்லை. மர்ம விலங்கு அந்த குட்டிகளைத் தூக்கிச் சென்றிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. ஒரே நாளில் 8 ஆடுகளை (4 இறப்பு, 4 மாயம்) இழந்த விவசாயி முருகன் குடும்பத்தினர் செய்வதறியாது திகைத்து நிற்கின்றனர்.
மருத்துவப் பரிசோதனை:
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கால்நடை மருத்துவர், உயிரிழந்த ஆடுகளைப் பிரேதப் பரிசோதனை செய்தார். ஆடுகளின் கழுத்து மற்றும் உடல் பகுதிகளில் இருந்த காயங்களைக் கொண்டு, அது என்ன விலங்காக இருக்கும் என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.
அண்மைக்காலமாக ஓமலூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இது போன்ற மர்ம விலங்கு தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன. எனவே, வனத்துறையினர் மற்றும் மாவட்ட நிர்வாகம் உடனடியாகத் தலையிட்டு, கண்காணிப்பு கேமராக்கள் மூலம் மர்ம விலங்கைக் கண்டறிந்து அதைப் பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிக்கனம்பட்டி கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
in
தமிழகம்
