மதுரையின் சமூக நல்லிணக்கத்தைக் கெடுக்க முயற்சி: காவல்துறை சிறப்பான செயல்பாட்டிற்கு நன்றி; பொது அமைதிக்கு எதிராகச் செயல்படும் அமைப்புகள் மீது சட்டப்படி நடவடிக்கை கோரிக்கை.
மதுரை மாவட்ட முஸ்லிம் ஐக்கிய ஜமாத் மற்றும் மதுரையில் உள்ள அனைத்து இஸ்லாமிய இயக்கங்களைச் சேர்ந்த தலைவர்கள் இன்று மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் பிரவீன் குமாரைச் சந்தித்து, சமூக ஒற்றுமையை வலியுறுத்தி முக்கிய மனு ஒன்றை அளித்தனர். இந்தச் செயல்பாட்டின் நோக்கம் குறித்து, மதுரை முஸ்லிம் ஐக்கிய ஜமாத் அமைப்பின் தலைவர் லியாகத் அலிகான் அவர்கள் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். திருப்பரங்குன்றம் விவகாரத்தை மையப்படுத்தி மதக் கலவரத்தைத் தூண்டி, மற்ற மாநிலங்களைப் போலத் தமிழகத்தையும் மாற்ற முயற்சிகள் நடைபெறுவதாகவும் அவர் ஆதாரபூர்வமாகக் குற்றம் சாட்டினார்.
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் நடைபெற்ற கார்த்திகை தீபத் திருவிழாவின் போது, தீபம் ஏற்றப்பட்ட நிலையில் சிலர் விழா அமைதியைச் சீர்குலைக்க முயன்றதாகவும், அப்போது காவல்துறையினர் சட்டவிரோத கும்பலை உடனடியாக அப்புறப்படுத்தி அமைதியையும் ஒழுக்கத்தையும் நிலைநாட்டியதற்காகவும், தமிழ்நாடு அரசுக்கும், மாவட்ட அதிகாரிகளுக்கும், காவல்துறை அதிகாரிகளுக்கும், அனைத்துத் துறை அதிகாரிகளுக்கும் மதுரை மக்களின் சார்பாக அவர் உண்மையான நன்றியைத் தெரிவித்துக்கொண்டார்.
"திருப்பரங்குன்றம் விவகாரத்தை வைத்து சில கலவரக்காரர்கள் இதை ஒரு மதக் கலவரமாக்க வேண்டும், சமூக நல்லிணக்கத்தைக் கெடுக்க வேண்டும் என நினைக்கிறார்கள்," என்று ஆதங்கப்பட்ட லியாகத் அலிகான், "எப்பொழுதும் மதுரை ஒற்றுமைக்குச் சான்றாக இருக்கக்கூடியது. இந்த மதுரையை ஒரு கலவர பூமியாக மாற்றி, அதில் அவர்கள் வாக்கு வங்கியை வளர்க்க வேண்டும் அல்லது விஷமத்தனம் செய்ய வேண்டும் என்ற நோக்கோடு சிலர் செயல்பட்டு வருகிறார்கள்," என்று அரசியல் சாயம் பூசினார். இதை அரசு மிகக் கவனமாகக் கண்டுபிடித்து, அவர்களைக் கைது செய்து, இந்தச் சிக்கலுக்கு ஒரு சுமுகமான நல்ல ஏற்பாடு செய்ய வேண்டும் என்று மாவட்ட ஆட்சியரிடம் வலியுறுத்தி மனு அளித்திருப்பதாகத் தெரிவித்தார்.
மேலும், சிலர் பொது அமைதிக்கு எதிராக மதுரையில் பொது இடங்களில் கூடியும், வலைதளங்களிலும் விஷச் செய்திகளைப் பரப்பியும் அமைதியைக் கெடுத்து வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். சமூக ஒற்றுமைக்கும் பொது அமைதிக்கும் எதிராக திட்டமிட்ட நோக்கத்துடன் செயல்படும் அமைப்புகள் மற்றும் அதன் தலைவர்கள் மீது உரிய சட்டப்படியான கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் அறைகூவல் விடுத்தார்.
தீபம் ஏற்றும் இடமான "எல்லைக்கல்லைத் தீபத் தூண் என ஒரு புரளியைக் கிளப்பிவிட்டு ஒரு மதக் கலவரத்தை உண்டு பண்ணி, மற்ற மாநிலங்களைப் போல இந்த மாநிலமும் ஆக்க முயல்கிறார்கள்," என்று அவர் வெளிப்படையாக விமர்சித்தார். திருப்பரங்குன்றத்தில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்கக்கூடிய சித்திரைத் திருவிழா போன்ற எந்த விழாவிலும் எந்தவித கலவரமோ பிரச்சனையும் ஏற்பட்டதில்லை என்றும், எல்லா இடங்களிலும் சகோதரத்துவமாக இருக்கிறார்கள் என்றும் அவர் சான்று பகர்ந்தார்.
கார்த்திகை தீபத்தன்று நடந்த அந்த நிகழ்வை அருமையான முறையில் கையாண்டு, வழக்கம் போலத் தீபம் ஏற்றி வைத்தது மகிழ்ச்சி அளிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். திருப்பரங்குன்றம் இஸ்லாமியர்கள் தீபம் ஏற்றுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்ததாகக் கூறப்படும் கருத்து குறித்தான கேள்விக்கு, "திருப்பரங்குன்றம் தர்காவைச் சேர்ந்தவர்கள் எங்கள் கூடத்தான் இருக்கிறார்கள். அவர்கள் சொல்லாமலேயே சில பேருக்காகக் கிளப்பிவிட்ட புரளி அது," என்று அவர் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
