மேல்முறையீட்டைக் காரணம் காட்டி தீபத் தூண் உத்தரவைச் செயல்படுத்த போலீஸ் மறுப்பு: நாளை உயர் நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணை!
திருப்பரங்குன்றம் தீபத் தூணில் தீபம் ஏற்ற தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அவர்கள் பிறப்பித்த உத்தரவைச் செயல்படுத்துவது குறித்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு, இன்று இரவு விசாரணைக்கு வருவதாக இருந்த நிலையில், இரவு விசாரணை இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு நாளை (டிசம்பர் 5, 2025) காலை 10.30 மணிக்குத் தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அவர்கள் முன்னிலையில் மீண்டும் விசாரணைக்கு வரவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் ராம ரவிக்குமார் என்பவர், திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத் தூணில் கார்த்திகை தீபம் ஏற்றக் கோரி ஒரு மனுவைத் தாக்கல் செய்தார். இந்தத் தீபத் தூண், சிக்கந்தர் தர்காவுக்கு அருகே, ஆனால் 50 மீட்டருக்கும் குறையாத தூரத்தில் அமைந்துள்ளது.
மனுதாரரின் வாதம்: கார்த்திகை தீபம் ஏற்றும் பாரம்பரியம் ஆண்டாண்டு காலமாக இந்தத் தீபத் தூணில் நடந்து வந்தது என்றும், இரண்டாம் உலகப்போர் சமயத்தில் இது நிறுத்தப்பட்டு விட்டது என்றும் மனுதாரர் வாதிட்டார். தீபத் தூணில் தீபம் ஏற்றுவது புனிதமான செயல் என்றும், அவ்வாறு ஏற்றப்படாவிட்டால் கோவில் உரிமைகள் பாதிக்கப்படும் என்றும் கூறப்பட்டது. மேலும், தீபத் தூண் அருகில் உள்ள தர்காவின் அமைப்பு எந்த வகையிலும் பாதிக்கப்படாது என்றும் வாதிடப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அவர்கள், தீபத் தூணில் தீபம் ஏற்றவும், அதற்கான முழுப் பாதுகாப்பை காவல்துறை வழங்கவும் கடந்த டிசம்பர் 1 ஆம் தேதி (2025) உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசும், கோவில் செயல் அலுவலர் தரப்பிலும் மேல்முறையீடு செய்யப்பட்டது. மேலும், மத நல்லிணக்கத்தைக் குலைக்கும் வகையில் மனுதாரர் இந்த விவகாரத்தை எடுத்துச் சென்றுள்ளார் என்று கூறி, மத நல்லிணக்கக் கூட்டமைப்பு சார்பில் நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்த எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
உயர்நீதிமன்றக் கிளை உத்தரவிட்டிருந்தும், டிசம்பர் 3 ஆம் தேதி கார்த்திகை தீபம் ஏற்றும் நாளில், தீபத் தூணில் தீபம் ஏற்றுவதற்கு கோவில் நிர்வாகம் எந்த ஏற்பாடுகளும் செய்யவில்லை. மலை உச்சியில் உள்ள உச்சிப் பிள்ளையார் கோயில் அருகே, வழக்கமாக ஏற்றப்படும் இடத்தில் மட்டுமே தீபம் ஏற்றப்பட்டது.
நீதிமன்ற உத்தரவு நடைமுறைப்படுத்தப்படாததால், மனுதாரர் ராம ரவிக்குமார் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைக் கோரி மீண்டும் தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்னிலையில் முறையீடு செய்தார்.
நீதிமன்ற அவமதிப்பு முறையீட்டை ஏற்றுக்கொண்ட நீதிபதி, கோவில் செயல் அலுவலர் மற்றும் மதுரை மாநகர காவல் ஆணையர் இருவரும் காணொலி வழியே ஆஜராக உத்தரவிட்டார். மேலும், மாலை 6 மணிக்குள் தீபம் ஏற்றப்பட வேண்டும் என்றும், இல்லையெனில் 6.05 மணிக்கு நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார். அதன் பின்னர், நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த CISF வீரர்களின் பாதுகாப்புடன் மனுதாரர் மலைக்குச் சென்று தீபம் ஏற்ற நீதிபதி உத்தரவிட்டார்.இருப்பினும், அரசுத் தரப்பில் சட்டம்-ஒழுங்கு பிரச்சனையைக் காரணம் காட்டியும், மாவட்ட ஆட்சியர் 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளதைக் காட்டியும், தீபம் ஏற்ற மலைக்குச் செல்ல மனுதாரரை அனுமதிக்கவில்லை. இந்த விவகாரம் தொடர்பாக அரசு தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
திருப்பரங்குன்றம் தீபத் தூணில் தீபம் ஏற்ற பிறப்பித்த உத்தரவைச் செயல்படுத்தியது குறித்து இன்று இரவு 10.30 மணிக்கு விசாரிக்க உள்ளதாகத் தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தனது உத்தரவில் தெரிவித்திருந்தார். இதற்கிடையே, மேல்முறையீடு செய்ய இருப்பதைச் சுட்டிக்காட்டி, மலையேற யாரையும் போலீசார் அனுமதிக்கவில்லை என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்தாதது தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணை இன்று (டிசம்பர் 4, 2025) இரவு விசாரணைக்கு வர இருந்த நிலையில், அது இரவில் இல்லை என்றும், நாளை (டிசம்பர் 5, 2025) காலை 10.30 மணிக்குத் தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அவர்கள் முன்னிலையில் மீண்டும் விசாரணைக்கு வரவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
