புகழ்பெற்ற கதாபாத்திரத்தின் பெயரையே தனதாக்கிக்கொண்ட 'உயரத்தை' அடைந்த கலைஞர்!
சென்னை, அக்டோபர் 2: தமிழ்த் திரையுலகில் தனது நகைச்சுவை நடிப்பால் நீடித்த முத்திரை பதித்த நடிகர் சாம்ஸ், இன்று விஜயதசமி நன்னாளில் வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவை அறிவித்துள்ளார். திரைத்துறைக்கு வந்த போது தனது இயற்பெயரான சுவாமிநாதனை மாற்றி சாம்ஸ் (CHAAMS) என்ற பெயரில் வலம் வந்த இவர், தனது மிகவும் பிரபல்யமான கதாபாத்திரமான ‘ஜாவா சுந்தரேசன்’ பெயரையே நிரந்தரமாகத் தனதாக்கிக் கொள்வதாகத் தீவிர அறிவிப்பை வெளியிட்டுள்ளார். ரசிகர்கள் மற்றும் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று இந்தப் பெயர் மாற்றத்தை மேற்கொண்டதாக அவர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
பல்வேறு படங்களில் சிறந்த நகைச்சுவை நடிகராக வலம் வந்த போதும், இயக்குநர் சிம்பு தேவன் இயக்கத்தில் வெளியான ‘அறை எண் 305ல் கடவுள்’ திரைப்படத்தில் இவர் ஏற்று நடித்த 'ஜாவா சுந்தரேசன்' கதாபாத்திரம் தமிழகத்தில் அசுர வளர்ச்சியைக் கண்டது. இக்காட்சியில் இவர் மூன்று விதமான கெட்டப்புகளில் வந்து தந்த அலப்பறைகள் சமூக வலைத்தளங்களில் மீம்ஸ் சரவெடியாகக் கொண்டாடப்பட்டதால், சாம்ஸ் என்ற பெயரைக் காட்டிலும் ஜாவா சுந்தரேசன் என்ற பெயரே மக்கள் மத்தியில் அதிகமான ரீச் அடைந்தது. எங்கெங்கு சென்றாலும் ரசிகர்கள் இவரை ஜாவா சுந்தரேசன் என்றே அழைத்து, 'சுற்றுவட்டாரத்தில் அசுர வளர்ச்சி அடைந்தவர்களை நாங்கள் ஜாவா சுந்தரேசன் என்றுதான் அழைப்போம்' எனப் பாராட்டி மகிழ்வதாகவும் நடிகர் குறிப்பிட்டார்.
மக்கள் விருப்பமே மகேசன் விருப்பம் எனக் கருதி இன்று முதல் (02.10.2025) தனது பெயரை 'ஜாவா சுந்தரேசன்' என அதிகாரப்பூர்வமாக மாற்றிக் கொள்வதாக அவர் அறிவித்தார். இந்தப் பெயருக்கும் புகழுக்கும் காரணமான ஜாவா சுந்தரேசன் பாத்திரத்தை உருவாக்கிய இயக்குநர் சிம்பு தேவன் அவர்களிடம் முறைப்படி அனுமதி பெற்று, அவரது வாழ்த்துகளோடு தனது திரைப்பயணத்தைத் தொடர்வதாக அவர் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்தார். மேலும், இப்படத்தைத் தயாரித்த பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் அவர்களுக்கும் தனது அன்பை வெளிப்படுத்தினார்.
நாளை மீது நம்பிக்கை வைத்தால், காலம் வரும்போது யாரும் பெரிய உயரங்களைத் தொடலாம் என்பதற்கு ஜாவா சுந்தரேசன் கதாபாத்திரம் ஓர் அடையாளமாக அமைந்தது. இந்தக் கதாபாத்திரத்தை மேலும் பிரபலமாக்கிக் கொண்டாடிய அனைத்து மீம்ஸ் படைப்பாளிகள் மற்றும் ஊடக நண்பர்களுக்கும் அவர் தனது மனப்பூர்வமான நன்றியைக் கூறியதோடு, அனைவரும் தொடர்ந்து தங்கள் அன்பையும் ஆதரவையும் தந்து இனிமேல் தன்னை ஜாவா சுந்தரேசன் என்றே அழைக்க வேண்டும் என்றும் பணிவோடு கேட்டுக்கொண்டுள்ளார்.
