காவல் நிலைய விதிமுறைகள் இறுக்கம்; விசாரணைக் கைதிகள், பெண்கள் பாதுகாப்புக்கு அதிக கவனம் செலுத்த உத்தரவு!
வரும் அக்டோபர் 14-ஆம் தேதி தமிழகச் சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் தொடங்க உள்ளதை முன்னிட்டு, சென்னை மாநகரக் காவல் ஆணையர் அருண், சென்னை காவல்துறை அதிகாரிகளுக்குப் பல முக்கிய உத்தரவுகளை உள்ளடக்கிய சுற்றறிக்கையை அனுப்பி வைத்துள்ளார்.
சட்டப்பேரவைக் கூட்டம், தலைமைச் செயலகப் பாதுகாப்பு மற்றும் காவல் நிலைய நடைமுறைகள் குறித்து வெளியிடப்பட்டுள்ள முக்கிய உத்தரவுகள் பின்வருமாறு:
காவல் நிலைய விசாரணைகள் குறித்த விதிமுறைகள்
காவல்துறையினர் மீதான விமர்சனங்களைத் தவிர்க்கும் வகையில், விசாரணை நடைமுறைகளில் அதிக விழிப்புடன் செயல்பட ஆணையர் அறிவுறுத்தியுள்ளார்:
காவல் ஆய்வாளரின் அனுமதியின்றி எந்தவொரு சந்தேக நபரையும் காவல் நிலையத்தில் அடைத்து வைக்கக் கூடாது.
விசாரணைக் கைதிகளைக் கூர்ந்து கண்காணிக்க வேண்டும்.
விசாரணையின்போது துன்புறுத்துதல் கூடாது. கைதுச் செய்யப்பட்டவர்களை விரைந்து நீதிமன்றக் காவலில் அனுப்ப வேண்டும்.
மதுபோதையிலும், காயத்துடனும் இருக்கும் கைதுச் செய்யப்பட்டவர்கள், சிகிச்சைக்குப் பின்னரே விசாரிக்கப்பட வேண்டும்.
வழக்குப் பதிவு செய்யப்படாமல் எந்த நபரையும் கைதி அறையில் வைத்திருக்கக் கூடாது.
பெண்கள், சிறுவர்கள், முதியவர்கள் மற்றும் நோய்வாய்ப்பட்டவர்களை விசாரணைக்கு அழைக்கக் கூடாது.
சட்டமன்றம் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள்
சட்டமன்றக் கூட்டத்தொடர் நடைபெறும் தலைமைச் செயலகம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள் குறித்துப் பின்வரும் பாதுகாப்பு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன:
தலைமைச் செயலகத்திற்கு உள்ளே வரும் நபர்கள் அனைவரும் கண்டிப்பாகச் சோதனை செய்யப்பட்டு மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும்.
வளாகத்திற்குள் துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்க அனுமதி கிடையாது.
தலைமைச் செயலகத்தைச் சுற்றிலும் சர்ச்சைக்குரிய சுவரொட்டிகள் ஒட்டப்படாத வண்ணம் கண்காணிக்க வேண்டும்.
முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களின் வாகனங்கள் செல்லும் பொழுது, அவற்றை வழிமறித்து மனு அளிப்பதோ அல்லது ஆர்ப்பாட்டங்கள் நடத்துவதோ அனுமதிக்கப்படக் கூடாது; உடனடியாகத் தடுத்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
கடுமையான குற்றங்களில் இரவு நேரங்களில் கைது செய்யப்பட்டவர்களைக் கவனமாகக் கண்காணித்து விசாரிக்க வேண்டும்.
