அதிமுக ஆட்சியில் 55% பணிகள் முடிந்தது; நிலுவையில் உள்ள சரவணம்பட்டி பாலம், அத்திக்கடவு திட்டங்களுக்கு நிதி ஒதுக்கக் கோரிக்கை!
கோவை, அக்டோபர் 10: கோவை அவிநாசி சாலையில் நேற்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலினால் திறந்து வைக்கப்பட்ட ஜி.டி. நாயுடு மேம்பாலத்தை இன்று (அக். 10) அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி பார்வையிட்டார். அப்போது பேசிய அவர், எஞ்சியிருக்கும் நாட்களிலாவது நிலுவையில் உள்ள திட்டங்களுக்கு நிதி ஒதுக்கி நடைமுறைப்படுத்துங்கள் என்று திமுக அரசை வலியுறுத்திப் பேசியதுடன், பல குற்றச்சாட்டுகளையும் முன்வைத்தார்.
அதிமுக ஆட்சியில் 50 ஆண்டுகளில் இல்லாத வளர்ச்சி
மேம்பாலத்தைப் பார்வையிட்டபோது, அங்கு குழுமியிருந்த அதிமுகவினர் அவருக்கு மாலை அணிவித்து, பட்டாசு வெடித்து உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த எஸ்.பி. வேலுமணி கூறியதாவது:
கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத வளர்ச்சி, வெறும் 5 ஆண்டுகளில் அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது. அவிநாசி சாலையில் இருந்த கடுமையான நெரிசலைக் கட்டுப்படுத்த மேம்பாலம் அமைக்க வேண்டும் என்று எடப்பாடியாரிடம் கோரிக்கை வைத்தோம். அப்போது முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமி அவர்கள், இந்தப் பாலத்துக்கான முழு நிதியையும் ஒதுக்கிக் கொடுத்தார்."
மொத்தம் ரூ.1621 கோடிக்கு மாநில அரசின் நிதியுடன் நிர்வாக ஒப்புதலும் வழங்கப்பட்டது. அதிமுக ஆட்சியில் இந்தப் பாலத்தின் பணிகள் 55 சதவீதம் முடிக்கப்பட்டன. ஆனால், ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னர், திமுக அரசு ஒன்றரை ஆண்டுகள் பணியைச் செய்யவில்லை. காலதாமதம் செய்து இப்போது பாலத்தைத் திறந்துள்ளனர்.
நிலுவைத் திட்டங்களுக்கு நிதி ஒதுக்குங்கள்:
கோவை மாநகரின் நெரிசலைக் கட்டுப்படுத்த மேம்பாலங்கள், சாலைகள் கட்டுமானம் எனப் பல திட்டங்களைக் கொண்டு வந்தது எடப்பாடியார் என்று அவர் குறிப்பிட்டார். எஸ்.ஐ.எச்.எஸ். காலனி பாலத்தை இந்த அரசு இன்னும் முடிக்காமல் உள்ளது. ஜி.டி. நாயுடு பெயர் சூட்டப்பட்டது எங்களுக்குச் சந்தோசம்தான், அவர் கோவையின் அடையாளம்.
திமுக அரசு கடந்த 4.5 ஆண்டுகளாக கோவைக்கு எதுவும் புதிதாக அறிவிக்கவில்லை. அதிமுக கொண்டு வந்த திட்டங்களைத் தான் முதல்வர் தொடர்ந்து திறந்து வைத்துக் கொண்டிருக்கிறார். திறக்கப்பட்டுள்ள பாலத்தில் வேகக் கட்டுப்பாட்டுக் கேமரா பொருத்த வேண்டும். விபத்தில்லாமல் பார்த்துக்கொள்ள முறையாக டைவர்சன் செய்ய வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுக்கிறேன்.
இருக்கின்ற காலத்திலாவது, சரவணம்பட்டி பாலத்துக்கு நிதி, அத்திக்கடவு திட்டத்தில் விடுபட்ட குளங்களை இணைக்க நிதி போன்ற நிலுவையில் உள்ள திட்டங்களுக்கு இந்த அரசு நிதி ஒதுக்கலாம்," என்றும் அவர் திமுக அரசை வலியுறுத்தினார். அதிமுக ஆட்சியின் திட்டங்களையே திமுக அரசு திறந்து வைப்பதாக எஸ்.பி. வேலுமணி குற்றச்சாட்டுகள் வைத்தது, அரசியல் வட்டாரத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது.