வடசென்னை ‘தாதா’வின் அத்தியாயம் நிறைவு! - ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு A1 குற்றவாளி நாகேந்திரன் மரணம்: 26 ஆண்டுகால ‘குற்றச் சாம்ராஜ்யம்’ முடிவுக்கு வந்தது!
கொலை, கொலை முயற்சி உட்பட 28 வழக்குகளில் தொடர்புடைய 'A+ ரவுடி': ஸ்டான்லி மருத்துவமனையில் கல்லீரல் பாதிப்பால் உயிர் பிரிந்தது!
சென்னை, அக்டோபர் 9: வடசென்னையின் பிரபல தாதாவாகவும், கடந்த ஆண்டு தமிழகத்தை உலுக்கிய பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் A1 குற்றவாளியாகவும் இருந்த ரவுடி நாகேந்திரன், இன்று சிகிச்சை பலனின்றி ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் உயிரிழந்தார். கல்லீரல் பாதிப்பால் கடந்த ஆகஸ்ட் மாதம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நாகேந்திரனின் மறைவுச் செய்தி வடசென்னையில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
குத்துச்சண்டை வீரராக உருவாக வேண்டும் என்ற கனவுடன் வியாசர்பாடி பகுதியில் வளர்ந்து வந்த நாகேந்திரன், காலப்போக்கில் A-பிளஸ் கேட்டகிரி ரவுடியாக மாறினார். 1990களில் மறைந்த ரவுடி வெள்ளை ரவி, நண்பர் விஜி ஆகியோருடன் இணைந்து மும்மூர்த்திகள் போல வடசென்னையில் வலம் வந்தார். கட்டப்பஞ்சாயத்து, மாமூல் என இவர்களது ஆதிக்கம் கொடிகட்டிப் பறந்தது. 1990இல் கொலை முயற்சி வழக்கில் முதல்முறையாகச் சிறை சென்ற நாகேந்திரன் மீது, 1991 முதல் அடுத்தடுத்து கொலை வழக்குகள் பதியப்பட்டு அவர் பிரபல தாதாவாகப் பரிணமித்தார். 1990களில் பிரபல தாதா சுப்பையாவை ஸ்டான்லி மருத்துவமனை வார்டுக்குள்ளேயே வெள்ளை ரவி கொலை செய்த பதைபதைக்க வைக்கும் சம்பவங்கள் இவர்களின் தாதாயிசத்தின் உச்சத்தை வெளிப்படுத்தின.
1997ஆம் ஆண்டில், வியாசர்பாடியைச் சேர்ந்த அதிமுக வட்டச் செயலாளர் ஸ்டான்லி சண்முகத்தைக் கொன்ற வழக்கில் கைதான நாகேந்திரனுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இந்த வழக்கில் அவருக்கு முதலில் பத்தாண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு, பின்னர் சென்னை உயர் நீதிமன்றம் அதை ஆயுள் தண்டனையாக உயர்த்தி உத்தரவிட்டது. உச்ச நீதிமன்றமும் அதை உறுதிப்படுத்தியதால், 1999ஆம் ஆண்டு முதல் அவர் ஆயுள் தண்டனைக் கைதியாகச் சிறையில் இருந்தார். ஆயுள் தண்டனை விதிகளின் கீழ் அவரது கூட்டாளி மின்ட் ரமேஷ் விடுதலை அடைந்தாலும், ஐந்து கொலை வழக்குகள், 14 கொலை முயற்சி வழக்குகள் உட்பட 28 வழக்குகள் நிலுவையில் இருந்ததால் நாகேந்திரனால் வெளியே வர முடியவில்லை. 26 ஆண்டுகளுக்கும் மேலாகச் சிறையிலேயே இருந்த அவர், உயர் பாதுகாப்பு பிளாக்கிலும் சிறை விதிகளை மீறியதாகச் சில முறை வழக்குகளைச் சந்தித்தார்.
சிறைக்குள்ளேயே இருந்தபடியே, தனது கூட்டாளிகள் மூலம் வடசென்னையைத் தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாகக் காவல்துறையினர் கூறிவந்தனர். கடந்த ஆண்டு ஜூலை 5ஆம் தேதி நடந்த பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்குக்கு அவர் சிறைக்குள் இருந்தபடியே திட்டம் தீட்டி வகுத்ததாகக் குற்றம்சாட்டப்பட்டு, அந்த வழக்கின் A-1 குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டார். இந்த வழக்கு தற்போது மாவட்ட முதன்மை நீதிபதி கார்த்திகேயன் விசாரித்து வரும் நிலையில், இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றம் செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதற்கிடையே, சில ஆண்டுகளுக்கு முன்பே கல்லீரல் பாதிக்கப்பட்டு அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருந்த நாகேந்திரன், கடந்த ஆகஸ்ட் மாதம் மீண்டும் உடல்நலக் குறைவால் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்குத் தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதன் மூலம், ஒருகாலத்தில் வடசென்னையை கலங்கடித்த ஒரு தாதாவின் குற்றச் சாம்ராஜ்யம் முடிவுக்கு வந்துள்ளது.
