நடிகர் விஜயின் துணிச்சலான அரசியல் வருகை; நீங்கள் நினைக்காத கூட்டணியெல்லாம் அமைய வாய்ப்பு!
தமிழக அரசியல் களத்தில் புதிய யூகங்களைக் கிளப்பும் விதமாக, அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் அவர்கள், நடிகர் விஜய் குறித்து ஒரு பகிரங்க அரசியல் கருத்தைத் தெரிவித்துள்ளார். இது, அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த டிடிவி. தினகரன், மக்கள் விரும்புகின்ற நடிகர் விஜய், எத்தனையோ பேர் பயப்படுகின்ற சூழலில் துணிச்சலாகக் கட்சி ஆரம்பித்திருக்கிறார். அதனைப் பார்த்துப் பொறாமைப்பட வேண்டிய அவசியம் என்ன? என்று கேள்வி எழுப்பினார். மேலும், விஜயுடன் சென்றால் என்ன? நீங்கள் நினைக்காத கூட்டணியெல்லாம் அமைய வாய்ப்பிருக்கிறது, என நேரடியாகவே ஒரு புதிய கூட்டணிகுறித்த விவாதத்தைத் தொடங்கி வைத்தார்.
திடீரென டிடிவி. தினகரன் விஜய்க்கு ஆதரவாகப் பேசியதும், ஒரு கூட்டணியை வெளிப்படையாகச் சுட்டிக்காட்டியதும் அரசியல் பார்வையாளர்கள் மத்தியில் பல கேள்விகளை எழுப்பியுள்ளது. வரவிருக்கும் தேர்தல்களில் அ.ம.மு.க.வின் நிலைப்பாடு எப்படி இருக்கும், தி.மு.க. அல்லது அ.தி.மு.க.வுக்கு எதிரான ஒரு புதிய அணி உருவாகுமா என்றெல்லாம் பலவிதமான யூகங்கள் எழுந்துள்ளன. தினகரனின் இந்தப் பேச்சு, தமிழக அரசியலில் ஒரு முக்கிய திருப்புமுனையாக அமைய வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது.