ரூ.1.50 கோடி மதிப்புள்ள கலசங்கள் பறிமுதல்; உத்தரபிரதேசத்தில் பரபரப்பு கைது!
புதுடில்லி: டில்லியில் நடந்த ஜெயின் சமூகத்தினரின் நிகழ்ச்சியில் பக்தர் போல வேடமணிந்து வந்து ரூ.1.50 கோடி மதிப்புள்ள தங்க கலசம் மற்றும் தங்கத் தேங்காயைத் திருடிச் சென்ற நபரை, போலீசார் உத்தரபிரதேசத்தில் வைத்து அதிரடியாகக் கைது செய்துள்ளனர். இந்தச் சம்பவம் வட இந்தியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜெயின் சமூகத்தினரின் 'தசலட்சண மகாபர்வ்' நிகழ்ச்சி கடந்த ஆகஸ்ட் 28-ம் தேதி தொடங்கி 10 நாட்கள் நடைபெற்றது. இந்த விழாவின்போது, வைரம் உள்ளிட்ட கற்கள் பதிக்கப்பட்டிருந்த 115 கிராம் எடையுள்ள தங்க கலசமும், 760 கிராம் எடையுள்ள தங்கத் தேங்காயும் மர்ம நபரால் திருடிச் செல்லப்பட்டன. இதன் மொத்த மதிப்பு ரூ.1.50 கோடியாகும். இந்தத் திருட்டு குறித்து கோவில் நிர்வாகிகள் போலீசில் புகார் அளித்தனர். சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, பூஷன் வர்மா என்ற நபர் ஜெயின் சமூகத்தினரைப் போலப் பாரம்பரிய உடை அணிந்து வந்து இந்தத் திருட்டில் ஈடுபட்டது தெரிய வந்தது.
இதையடுத்து, வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய டில்லி போலீசார், குற்றவாளி பூஷன் வர்மாவை உத்தரபிரதேசத்தில் வைத்து கைது செய்தனர். மேலும், அவனிடமிருந்த திருடப்பட்ட கலசங்களையும் பறிமுதல் செய்தனர். ஏற்கனவே, அவன் மீது 10-க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகள் நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.