தமிழகத்திற்கு பெருமுதலீடுகளை ஈர்க்க ஒருவாரப் பயணமாக ஜெர்மனி சென்ற முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு தமிழ் மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், தமிழகத்திற்குப் பெருமளவிலான முதலீடுகளை ஈர்ப்பதற்காக ஒரு வாரப் பயணமாக ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து நாடுகளுக்குச் சென்றுள்ளார். சென்னை விமான நிலையத்திலிருந்து ஆகஸ்ட் 30-ஆம் தேதி புறப்பட்ட அவர், ஆகஸ்ட் 31-ஆம் தேதி ஜெர்மனி சென்றடைந்தார்.
அங்குள்ள தமிழர்கள் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு உற்சாகமான வரவேற்பு அளித்தனர். இந்த வரவேற்பு குறித்து தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்ட முதல்வர், “வணக்கம் ஜெர்மனி. இங்கே உள்ள எனது தமிழ் குடும்பத்தினரின் பாசத்தால் தழுவப்பட்டு, தமிழ்நாட்டின் பலங்களை வெளிப்படுத்தவும், முதலீடுகளை ஈர்க்கவும், பிரகாசமான எதிர்காலத்தை உருவாக்கவும் உறுதி செய்வோம்” என நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.
முதலமைச்சரின் பயணத் திட்டம்:
ஆகஸ்ட் 31: ஜெர்மனியில் உள்ள ஐரோப்பாவில் மாபெரும் தமிழ் கனவு 2025 நிகழ்ச்சியில் பங்கேற்று ஐரோப்பா முழுவதும் உள்ள தமிழர்களுடன் உரையாடுகிறார்.
செப்டம்பர் 1: ஜெர்மனியிலிருந்து லண்டனுக்குப் புறப்பட்டுச் செல்கிறார்.
செப்டம்பர் 2: கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்.
செப்டம்பர் 3: லண்டனில் உள்ள தொழில் அதிபர்களைச் சந்தித்து தமிழகத்தில் முதலீடு செய்ய அழைப்பு விடுக்கிறார்.
செப்டம்பர் 4 & 6: லண்டனில் அயலகத் தமிழர் நலவாரியம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.
செப்டம்பர் 7: லண்டனிலிருந்து புறப்பட்டு, செப்டம்பர் 8-ஆம் தேதி சென்னை வந்தடைகிறார்.
முதலமைச்சரின் இந்தப் பயணத்தில் தலைமைச் செயலாளர், அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா, மனைவி துர்கா ஸ்டாலின் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் உடன் சென்றுள்ளனர். முன்னதாக, தமிழகத்தில் திராவிட மாடல் ஆட்சியில் இதுவரை ₹10.62 லட்சம் கோடியில் முதலீடுகள் ஈர்க்கப்பட்டு, 929 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன என்று முதல்வர் தெரிவித்திருந்தார்.