தல தோனியின் புதிய அவதாரம்: சென்னையில் 7Padel பயிற்சி மையத்தைத் தொடங்கினார்!
7Padel என்ற பெயரில் விளையாட்டுப் பயிற்சி மையத்தைத் துவக்கி வைத்து, ருதுராஜ் கெய்க்வாட், அனிருத் ஆகியோருடன் இணைந்து எம்.எஸ். தோனி Pickle Ball விளையாடினார்
சென்னையில் தோனியின் 7Padel பயிற்சி மையம்
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், ரசிகர்களால் 'தல' என அன்புடன் அழைக்கப்படுபவருமான மகேந்திர சிங் தோனி, சென்னையில் 7பாடல்ஸ் (7Padel) என்ற தனது முதல் விளையாட்டு மையத்தைத் திறந்துள்ளார். சென்னை பாலவாக்கத்தில் அமைந்துள்ள இந்த 20,000 சதுர அடி பரப்பளவு கொண்ட இந்த மையம், நவீன வசதிகளுடன் உலகத் தரமான விளையாட்டுப் பயிற்சி மையமாக அமைந்துள்ளது.
இந்த மையத்தில், மூன்று பாடல் (Padel) விளையாட்டு மைதானங்கள், பிக்கிள்பால் விளையாட்டிற்கான வசதி, உடற்பயிற்சிக் கூடம் (ஜிம்), நீச்சல் குளம், கஃபே மற்றும் பல வசதிகள் உள்ளன. இந்த மையம் அனைத்து வயதினரும், விளையாட்டு ஆர்வலர்களும் பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
தோனியின் இந்தப் புதிய முயற்சி, விளையாட்டுத் துறையில் அவரது ஆர்வத்தை மீண்டும் உறுதிப்படுத்துகிறது. பாடல் மற்றும் பிக்கிள்பால் போன்ற புதிய விளையாட்டுகளை மக்களிடம் கொண்டு சேர்ப்பதோடு, ஆரோக்கியமான மற்றும் சுறுசுறுப்பான வாழ்க்கை முறையை ஊக்குவிக்கும் வகையில் இந்த மையம் அமைந்துள்ளது. இந்தத் திறப்பு விழாவில் கிரிக்கெட் வீரர் ருத்துராஜ் கெய்க்வாட் மற்றும் இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர்.
வீடியோ வைரல்
ருதுராஜ் கெய்க்வாட், அனிருத் ஆகியோருடன் இணைந்து தன்னுடைய புதிய Padel உள்ளிட்ட பல விளையாட்டுப் பயிற்சி Pickle Ball விளையாடிய எம்.எஸ். தோனியின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
இது போன்ற மையங்கள், இளைஞர்கள் மத்தியில் விளையாட்டு ஆர்வத்தை அதிகரிப்பதோடு, புதிய திறமைகளை வளர்க்கவும் உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.