தலைநகர் டெல்லியில் அதிர்ச்சி.. நடைப்பயிற்சி சென்ற காங்கிரஸ் எம்.பி. சுதாவிடம் நகை பறிப்பு!
நாட்டின் தலைநகரான டெல்லியின் மிக முக்கியமான சாலையில், காலை நடைப்பயிற்சி சென்றுகொண்டிருந்த மயிலாடுதுறை காங்கிரஸ் எம்.பி. சுதாவிடம், மர்மநபர் ஒருவர் "துணிகரமாக" நகை பறித்துச் சென்ற சம்பவம், அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உயர்மட்டப் பாதுகாப்பு உள்ள பகுதியில் நடந்த இச்சம்பவம், தலைநகரின் சட்டம்-ஒழுங்கு குறித்துப் பல கேள்விகளை எழுப்பியுள்ளது.
டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் தங்கியிருக்கும் காங்கிரஸ் எம்.பி. சுதா, இன்று காலை வழக்கம்போல நடைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்தார். அவருடன் திமுகவைச் சேர்ந்த மற்றொரு எம்.பி.யான சல்மாவும் உடன் இருந்தார். சாணக்கியபுரி சாலை, செக் குடியரசு தூதரகத்தின் அருகே அவர்கள் இருவரும் சென்று கொண்டிருந்தபோது இந்தச் சம்பவம் அரங்கேறியுள்ளது.
ஸ்கூட்டியில் வந்த ஒரு மர்மநபர், எந்தவித பயமுமின்றி அவர்களின் அருகே வந்து, எம்.பி. சுதா அணிந்திருந்த நான்கரை பவுன் தங்கச் சங்கிலியை அசுர வேகத்தில் அறுத்துக்கொண்டு சென்று விட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் திடீர் நிகழ்வால் அதிர்ந்துபோன சுதா, உடனடியாகச் சாணக்கியபுரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
பொதுமக்கள் நடமாட்டம் உள்ள பகுதியிலும், இரு நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றாக நடைப்பயிற்சி மேற்கொண்டபோதும் இந்தத் துணிகரச் சம்பவம் நடந்துள்ளதால், டெல்லியில் பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது. புகார்குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள சாணக்கியபுரி போலீசார், அந்த மர்மநபரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.