திறந்த புத்தக மதிப்பீட்டு முறைக்கு ஒப்புதல்; தேசிய கல்விக் கொள்கையின் அடிப்படையில் புதிய திட்டம்!
டெல்லி: தேசிய இடைநிலைக் கல்வி வாரியமான சிபிஎஸ்இ, 9ஆம் வகுப்பு மாணவர்கள் புத்தகங்களைப் பார்த்துத் தேர்வு எழுதும் முறைக்கு அதிரடியாக ஒப்புதல் அளித்துள்ளது. இந்த நடைமுறை, அடுத்த கல்வியாண்டு முதல் செயல்பாட்டுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது, தேர்வு முறைகளில் ஒரு புதிய புரட்சியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தேசிய கல்விக் கொள்கையின் அடிப்படையில் மாணவர்களின் மனப்பாடத் திறனைத் தாண்டி, அவர்களின் பகுப்பாய்வு மற்றும் புரிந்துகொள்ளும் திறனை மேம்படுத்தும் நோக்கில் இந்த மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளதாக சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது. திறந்த புத்தக மதிப்பீடுகள் என அழைக்கப்படும் இந்தத் திட்டத்தின்படி, மாணவர்கள் தேர்வு நேரத்தில் பாடப்புத்தகங்களைப் பயன்படுத்திக்கொள்ளலாம். இது, நேரடியாகக் கேள்விகளுக்கு விடையளிப்பதற்குப் பதிலாக, தகவல்களைப் பயன்படுத்தி யோசித்து பதிலளிக்கும் திறனை வளர்க்கும் எனக் கல்வி வல்லுநர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
இந்தத் திட்டம் புதிதல்ல. இதேபோன்ற ஒரு முயற்சி கடந்த 2014-ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டு, பிறகு 2017-ஆம் ஆண்டில் கைவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது. தற்போது மீண்டும் அதே திட்டத்தைக் கொண்டு வரும் முடிவை சிபிஎஸ்இ எடுத்துள்ளது. இதன் மூலம் மாணவர்களின் தேர்வு அணுகுமுறை முழுமையாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.