ஒவ்வொரு ரத்தத்துளியும் ஒரு புதிய வாழ்வு! - இரட்டை சதத்தை நெருங்கும் ராணிப்பேட்டையின் குருதிக்கொடையாளர்!
176 முறை ரத்த தானம் செய்த குமரன் ரவிசங்கருக்கு அமைச்சர் பாராட்டு; இளைஞர்கள் முன்வர வேண்டும் என உருக்கமான வேண்டுகோள்!
ராணிப்பேட்டை: உயிரோடு இருக்கும்போதே உயிரைக் கொடுக்கும் ஒரு அரிய சேவையைத் தனது வாழ்நாள் முழுவதும் செய்து வரும் ஒரு மாமனிதர், ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சேர்ந்த குமரன் ரவிசங்கர். தனது குருதிக் கொடை மூலம் 176 உயிர்களைக் காப்பாற்றியுள்ள இவர், இரட்டைச் சதத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறார். அவரது இந்தச் சேவையைப் பாராட்டி, தமிழ்நாடு சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பாராட்டு சான்றிதழ் வழங்கி கௌரவித்தார்.
சென்னை அடுத்த பூவிருந்தவல்லியில் பிறந்த குமரன் ரவிசங்கர், தனது 56 வயதில், இன்று ஒரு முழுநேர சமூக சேவகராகச் செயல்பட்டு வருகிறார். அவரது குருதிக் கொடைப் பயணம் 1984-ல் ஒரு கர்ப்பிணிப் பெண்ணின் அவசரத் தேவைக்காக ஒரு தற்காலிக நர்சிங் ஹோமில் தொடங்கியது. இச்செய்தி தெரிந்ததும் அவருடைய தாய், மூன்று நாட்கள் அவரை வீட்டுக்குள் அனுமதிக்கவில்லை என நகைச்சுவையாகக் கூறிய அவர், பிறகு அதே பெற்றோர்கள் தனக்கு உதவியாக இருந்தது ஒரு சிறப்பம்சம் என நெகிழ்ந்தார்.
உறுப்பு தானத்திலும் முன்னோடி!
கொடையாளி அளிக்கும் ரத்தத்தின் மூலம் மூன்று உயிர்களைக் காப்பாற்ற முடியும் என்ற அறிவியல் உண்மைக்கு அவர் ஒரு உதாரணமாகத் திகழ்கிறார். இதுவரை அவர் அளித்த ரத்தம் அனைத்தும் அவசரத் தேவைக்கு மட்டுமே என்பதும், குறிப்பாக, ராமச்சந்திரா மருத்துவமனைக்கு மட்டும் சுமார் 56 முறை அவசரத் தேவைக்குக் குருதி கொடை அளித்திருப்பதும் அவரது அர்ப்பணிப்பைக் காட்டுகிறது.
மேலும், அவரது குடும்பத்தைச் சேர்ந்த 18 பேர் கண் தானம் செய்துள்ளதோடு, குமரனும் மரணத்திற்குப் பிறகு வேலூர் அடுக்கம்பாறை மருத்துவமனைக்குத் தனது உடலைத் தானம் செய்யப் பதிவு செய்துள்ளார்.
இளைஞர்களுக்கு வேண்டுகோள்!
இன்று, தமிழ்நாட்டில் ஆண்டுக்கு 12 லட்சம் யூனிட் ரத்தம் தேவைப்படும் நிலையில், 9 லட்சம் யூனிட் மட்டுமே கிடைப்பதாகவும், மீதமுள்ள 3 லட்சம் யூனிட் ரத்தம் கிடைக்காததால் ஏற்படும் உயிரிழப்புகளைத் தடுக்க இளைஞர்கள் முன்வர வேண்டும் என அவர் உருக்கமான வேண்டுகோளை விடுத்துள்ளார். ரத்ததானம் செய்வோம்... உயிர்களைக் காப்போம் என்ற அவரது முழக்கம், பல இளைஞர்களை ஊக்கப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
