நாளை தமிழகத்தில் பாரத் பந்த்: இயல்பு வாழ்க்கை பாதிக்குமா? முழுத் தொகுப்பு!
சென்னை: மத்திய அரசின் தொழிலாளர் மற்றும் விவசாய விரோதக் கொள்கைகளைக் கண்டித்து, நாடு தழுவிய பாரத் பந்த் நாளை (ஜூலை 9) நடைபெறுகிறது. இந்தப் போராட்டத்திற்கு தமிழகத்தில் பல்வேறு தொழிற்சங்கங்கள் மற்றும் விவசாய அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், தமிழகத்தின் இயல்பு வாழ்க்கை எப்படி இருக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
அரசு எச்சரிக்கை, போக்குவரத்து சவால்:
பாரத் பந்த் போராட்டத்தில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தமிழ்நாடு அரசு எச்சரித்துள்ளது. இதனால் அரசு அலுவலகங்கள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் பெரும் பாதிப்பு இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், அரசுப் போக்குவரத்து ஊழியர்கள் இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்டால், தமிழகம் முழுவதும் அரசுப் பேருந்து சேவைகள் கடுமையாகப் பாதிக்கப்படலாம். அரசு மாற்று ஏற்பாடுகளைச் செய்ய முயற்சித்தாலும், பயணிகளுக்கு அசௌகரியம் ஏற்பட வாய்ப்புள்ளது. தனியார் பேருந்துகள் மற்றும் ஆட்டோக்களின் சேவையும் குறைந்த அளவில் இருக்கும். ரயில் சேவைகளுக்கு அதிகாரப்பூர்வத் தடை இல்லை என்றாலும், ஆங்காங்கே நடக்கும் போராட்டங்களால் ரயில் சேவைகளில் தாமதம் ஏற்படலாம்.
வங்கிகள், கடைகள் நிலவரம்:
தமிழகத்தில் வங்கி ஊழியர்களும் போராட்டத்தில் பங்கேற்பதால், வங்கிகளின் பணிகள் பாதிக்கப்படும். பணம் எடுப்பது, காசோலை பரிவர்த்தனைகள் போன்ற அன்றாடச் சேவைகள் தடைபடலாம். எனினும், ஆன்லைன் வங்கிச் சேவைகளும், ஏடிஎம்களும் வழக்கம் போல் செயல்படும். பல்வேறு வர்த்தகச் சங்கங்கள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்திருப்பதால், முக்கிய நகரங்கள் மற்றும் மாவட்டங்களில் கடைகள் அடைக்கப்பட்டிருக்க வாய்ப்புள்ளது. மருந்தகங்கள், பால் கடைகள் போன்ற அத்தியாவசிய கடைகள் இயங்கும்.
மின்சாரம், தனியார் நிறுவனங்கள்:
நாடு முழுவதும் மின்சாரத் துறை ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் பங்கேற்பதால், மின் விநியோகத்திலும் சில இடங்களில் இடையூறுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. தமிழகத்தில் இதன் தாக்கம் போராட்டத்தின் தீவிரத்தைப் பொறுத்து அமையும். தனியார் நிறுவனங்கள் மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் வழக்கம் போல் செயல்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. போக்குவரத்து இடையூறுகளை சமாளிக்க, சில நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு வீட்டிலிருந்து பணிபுரிய அனுமதி அளிக்கலாம்.
நாளை அத்தியாவசியத் தேவையின்றி வெளியே செல்வதைத் தவிர்க்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பயணத் திட்டங்கள் இருந்தால், புறப்படும் முன் போக்குவரத்து நிலவரம் குறித்து சரிபார்த்துக் கொள்வது அவசியம். வங்கிகளில் முடிக்க வேண்டிய பணிகளை இன்றே முடித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். உள்ளூர் செய்திகள் மற்றும் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளைத் தொடர்ந்து கவனிப்பது அவசியம்.