காவலாளி அஜித்குமார் மரணம்... நிவாரணம் வழங்கி ஆறுதல் கூறிய விஜய்..! Security guard Ajith Kumar dies Vijay offers relief and comfort

காவலாளி அஜித்குமார் மரணம்... நிவாரணம் வழங்கி ஆறுதல் கூறிய விஜய்!

நகை திருட்டு வழக்கில், காவல்நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட இளைஞர் உயிரிழந்த விவகாரத்தில், 5 காவலர்களும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.  இந்த சம்பவத்தில் உயிரிழந்த அஜித்குமாரின் தாயாரிடம் முதல்வர் தொலைப்பேசியில் மன்னிப்பு கேட்ட நிலையில், இன்று தவெக தலைவர் விஜய் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார். 

அஜித்குமார் மீது வழக்கு

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரத்தைச் சேர்ந்த அஜித்குமார் என்ற இளைஞர் அந்த கிராமத்தில் இந்து அறநிலையத்துறையின் கீழ் இயங்கும் அருள்மிகு பத்திரகாளியம்மன் கோவிலில் தற்காலிக காவலாளியாக பணிபுரிந்து வந்தார். அந்த கோவிலுக்கு கடந்த ஜூன் 27-ம் தேதி சாமி கும்பிட, மதுரை மாவட்டம், திருமங்கலத்தைச் சேர்ந்த நிகிதா தனது தாயாருடன் காரில் வந்துள்ளார். பின்னர் தனது காரை ‘பார்க்கிங்’ செய்ய சொல்லி, காவலாளியான அஜித்குமாரிடம் சாவியை கொடுத்ததாகவும், அவருக்கு கார் ஓட்ட தெரியாததால், மற்றொருவர் உதவியுடன் காரை அஜித்குமார் ‘பார்க்கிங்’ செய்துவிட்டு சாவியை நிகிதாவிடம் கொடுத்ததாகவும் கூறப்படுகிறது. தொடர்ந்து, சாமி கும்பிட்டுவிட்டு, நிகிதா காரில் ஏறியபோது, பையில் இருந்த 10 பவுன் நகை, ரூ.2,200 காணவில்லை என்று காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரை பெற்றுக்கொண்ட அதிகாரிகள் விரைந்து வழக்குப்பதிவு செய்து குற்றவாளியாக கருதப்படும் அஜித்குமாரை அடித்து துன்புறுத்தி விசாரணை மேற்கொண்டுள்ளனர். 

காவலாளி அஜித்குமார் மரணம்

நகை திருட்டு புகாரினை தொடர்ந்து, சந்தேகத்தின் பேரில் 5 பேரை விசாரணை செய்த தனிப்படை காவலர்கள் மற்றவர்களை விடுவித்துவிட்டு, அஜித்குமாரை மட்டும் வெளியே அழைத்து சென்று காட்டுமிராண்டித்தனமாக தாக்கியுள்ளனர். கோயிலில், பக்தர் ஒருவரிடம் நகை திருடிய வழக்கு விசாரனைக்காக காவல்நிலையம் அழைத்து செல்லாமல், இந்து அறநிலையத்துறை செயல் அலுவலர் அலுவலகம் பின்புறம் அமைந்துள்ள "கோ" சாலையில் வைத்து தனிப்படை காவலர்கள் தாக்கியுள்ளனர்.  இதில், நிலைக்குலைந்த அஜித்குமார் பரிதாபமாக உயிரிழந்தார்.  

அரசியல் கட்சிகள் கண்டனம்

இதனை அடுத்து அவர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்ய கோரி உறவினர்கள் உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டதுடன் அதற்கு ஆதரவாக அதிமுக, பா.ஜ.க, விஜையின் த.வெ.க உள்ளிட்ட கட்சியினர் போராட்டத்தில் குதித்ததுடன் கட்சிகளின் தலைவர்களும் கண்டன அறிக்கை விடுத்தனர். மேலும், இந்த வழக்கானது காவல் நிலைய மரணத்தின்போது கடைபிடிக்கப்படும் 196 பிரிவு அமல்படுத்தப்பட்டு திருப்புவனம் நீதிமன்ற நீதிபதி வெங்கடேச பிரசாத் முன்னிலையில் இறந்த அஜித்குமாரின் உடல் பிரேதபரிசோதனை செய்யப்பட்டு அவரது உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

நீதிபதி விசாரணை

இதனை அடுத்து நீதிபதி வெங்கடேச பிரசாத் சம்பவம் நடைபெற்ற பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டதுடன் அங்குள்ள கோவில் பணியாளர்களிடமும் விசாரனை மேற்கொண்டார். இதனை அடுத்து பிரேத பரிசோதனையின் முதல் கட்ட ஆய்வறிக்கை அவரிடம் சமர்ப்பிக்கப்பட்டதில் இறந்த அஜித்குமாரின் உடலில் 18 இடங்களில் தாக்குதலுக்குள்ளான காயங்கள் இருப்பது உறுதியாகவே நீதிபதி உத்தரவின்பேரில் உடனடியாக அந்த வழக்கானது கொலை வழக்காக மாற்றப்பட்டது.  

காவலர்கள் மீது வழக்கு பதிவு

இந்த சம்பவத்தில் அஜித்குமாரை தாக்கிய காவலர்கள் மீது நடவடிக்கை , ஏற்கனவே அந்த பணியில் ஈடுபட்டிருந்த சிறப்பு பிரிவு காவலர்களான பிரபு, கண்ணன், சங்கரமணிகண்டன், ராஜா, ஆனந்த், காவல் வாகன ஓட்டுநரான ராமச்சந்திரன் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். மேலும், 5 பேரை மட்டும் காவல்துறையினர் கைது செய்து நீதிபதி முன் ஆஜர்படுத்திய நிலையில் மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.

மன்னிப்பு கேட்ட முதலமைச்சர்

காவலர்க தாக்கியதில் உயிரிழிந்த காவலாளி அஜித்குமாரின் வீட்டுக்கு சென்ற அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் அவர்களது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். உடன் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அஜித்குமாரின் தாயார், சகோதரர் ஆகியோரிடம் செல்போன் மூலம் தொடர்பு கொண்டு அவர்களிடம் தனது வருத்தத்தையும், ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்தார்.  தொடர்ந்து, அஜித்குமாரின் சகோதரருக்கு அரசு வேலையும், குடும்பத்துக்கு இலவச வீட்டுமனை பட்டாவும் அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் வழங்கினார். 

வழக்கு சிபிஐ-க்கு மாற்றம்

சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை, இவ்வழக்கில் சிபிசிஐடி தனது விசாரணையைத் தொடரலாம் எனவும் தெரிவித்தது.  காவல் துறையைச் சேர்ந்த ஐவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ள நிலையில், இந்த வழக்கின் விசாரணை குறித்து, எந்தவிதமான கேள்வியும் வரக்கூடாது என்பதற்காக சிபிஐக்கு வழக்கு மாற்றப்பட்டுள்ளதாக முதலமைச்சர் தெரிவித்தார். 

சி.பி.ஐ. விசாரணைக்கு முழு ஒத்துழைப்பை தமிழ்நாடு அரசு வழங்கும் என்று  முதலமைச்சர் கூறிய நிலையில், மேலும் இந்த வழக்கு குறித்து மதுரை மாவட்ட நீதிபதி ஜான்சுந்தர்லால் சுரேஷ் விசாரணையை திருப்புவனத்தில் தொடங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

விஜய் நேரில் ஆறுதல்

போலீஸ் விசாரணையில் கொல்லப்பட்ட அஜித்குமாரின் குடும்பத்தினரான தாய் மற்றும் தம்பி நவீன்குமாரை  தவெக தலைவர் விஜய் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். தொடர்ந்து அஜித்குமாரின் உருவப்படத்துக்கு மலர்தூவி விஜய் அஞ்சலி செலுத்திய விஜய், ரூ.2 லட்சம் நிதி உதவி வழங்கினார்.  தொடர்ந்து, அவர்களிடம் விஜய், "உங்களுக்கு எப்போதும் நாங்கள் துணையிருப்போம். உங்களுக்கான நீதி கிடைக்கும் வரை எங்களது தொடர் ஆதரவை வழங்குவோம் என்றும், இனிவரும் காலங்களில் காவல் துறை சித்ரவதையில் யாரும் உயிரிழக்காத வகையில் அரசு கண்காணிப்பைத் தீவிரப்படுத்த வேண்டும் என்று அவர்களிடம் உறுதியளித்தார்.

Previous Post Next Post

Post Ads 1

Post Ads 2

Travel with us!

News Editor's/Reporter's can join with our Desk Team. Publish your news now on 24×7. Reachout with your contact through editor@ipdtamil.com