தமிழகத்தில் தனிப்படைகள் கலைப்பு: டிஜிபி சங்கர் ஜிவால் அதிரடி உத்தரவு!
சென்னை: தமிழ்நாடு முழுவதும் செயல்பட்டு வரும் சிறப்புத் தனிப்படைகள் மற்றும் அங்கீகரிக்கப்படாத தனிப்படைகள் அனைத்தையும் கலைக்க தமிழக காவல்துறை டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் தனிப்படை காவலர்களின் தாக்குதலில் இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
திருப்புவனம் சம்பவத்தில் தனிப்படை காவலர்கள் தாக்கியதில் இளைஞர் உயிரிழந்ததாகக் குற்றச்சாட்டு எழுந்த நிலையில், பொதுமக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்தே டிஜிபி இந்த முக்கிய உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
மாவட்ட கண்காணிப்பாளர் (SP) மற்றும் துணை கண்காணிப்பாளர் (DSP) தலைமையில் செயல்பட்டு வந்த சிறப்புத் தனிப்படைகள் மற்றும் அதிகாரப்பூர்வமற்ற தனிப்படைகள் அனைத்தும் கலைக்கப்படும் என்று டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். மேலும், மண்டல ஐஜிக்கள் இந்த விவகாரத்தை நேரடியாகக் கண்காணித்து, தனிப்படைகள் குறித்த விரிவான அறிக்கையைச் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அவர் வாய்மொழி உத்தரவு பிறப்பித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
காவல்துறையில் வெளிப்படைத்தன்மையையும், பொறுப்புடைமையையும் உறுதி செய்யும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.