பேருந்தில் பிறந்த குழந்தை.. தூக்கியெறிந்து கொலை செய்த தம்பதியினர் கைது!
மகாராஷ்டிராவின் புனே அருகே மனதை பதறவைக்கும் ஒரு கொடூர சம்பவம் ஒன்று நடந்துள்ளது. பஸ்சில் பயணித்த இளம் தம்பதியினர், பேருந்தில் குழந்தையைப் பிரசவித்தபின், அதனை ஜன்னல் வழியாக வெளியே தூக்கி எறிந்த சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
புனேவிலிருந்து சதாரா நோக்கிச் சென்று கொண்டிருந்த ஒரு தனியார் ஸ்லீப்பர் வகை பேருந்தில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. ரித்திகா (22) மற்றும் அவரது கணவர் ஷாயிக் (26) என்ற இளம் தம்பதி பேருந்தில் பயணித்துக் கொண்டிருந்தபோது, ரித்திகாவுக்கு திடீரெனப் பிரசவ வலி ஏற்பட்டது. பிறகு பேருந்திலேயே குழந்தையைப் பிரசவித்துள்ளார்.
ஆனால், அதன்பின் நடந்த செயல் அனைவரையும் அதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளது. குழந்தையை அவர்கள் ஜன்னல் வழியாக வெளியே எறிந்ததாகப் பேருந்து ஓட்டுநர் மற்றும் பிற பயணிகள் சந்தேகம் கொண்டுள்ளனர்.
வெளியே எதையோ வீசும் போல ஓட்டுநருக்குத் தென்படவே, அவர் உடனடியாகப் பேருந்தை நிறுத்தி விசாரணை செய்துள்ளார். ஆனால் தம்பதி வாந்தி எடுத்ததாகக் கூறி சமாளித்துள்ளனர். ஆனால் ரிதிகாவின் படுக்கைக்கு அருகில் பயணம் செய்த மற்றொரு பயணி கொடுத்த புகாரின் பேரில் பேருந்தை நிறுத்தி எதை வெளியில் வீசினர் என்று பார்த்தபோது துணியில் குழந்தை ஒன்று இருந்தது. பின்னர் சில கிலோமீட்டர் தூரம் சென்றபிறகு, சாலையோரம் குழந்தையின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது.
தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, உடலைக் கைப்பற்றிப் பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். அதன்பின், விசாரணையின் அடிப்படையில் ரித்திகா மற்றும் ஷாயிக் இருவரையும் கைது செய்துள்ளனர். ரிதிகாவிடம் போலீசார் விசாரித்தபோது தனது கணவர்தான் குழந்தையை ஜன்னல் வழியாக வெளியில் போட்டுவிட்டதாகத் தெரிவித்துள்ளார்.
இருவரின் மீதும் சந்தேகம் கொண்ட போலீசார் குழந்தை பிறந்தவுடன் உயிருடன் இருந்ததா அல்லது பிறக்கும் போதே உயிரிழந்ததா? என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், குழந்தை எவ்வாறு உயிரிழந்தது என்பதை உறுதி செய்யும் வகையில் மருத்துவ பரிசோதனை நடந்து வருகிறது. இருவரிடமும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இருவரும் புனேயில் வசிப்பதாகவும், குழந்தையை வளர்க்க முடியாது என்று கருதி குழந்தையை வெளியில் போட்டதாகப் போலீசாரிடம் தெரிவித்துள்ளனர். பெற்ற குழந்தையைப் பேருந்திலிருந்து வெளியில் தூக்கிப்போட்ட இந்தச் சம்பவம் சமூக ஊடகங்களில் வெளியான நிலையில், பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் இந்தச் செயலுக்குக் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.