காசாவில் அதிகரிக்கும் உணவுப் பஞ்சம்… இஸ்ரேல் படையினர் துப்பாக்கிச்சூட்டில் 32 பேர் உயிரிழப்பு!
காசாவில் உணவுக்காகக் காத்திருந்தவர்கள்மீது இஸ்ரேல் படையினர் விநியோக மையம்மீது நடத்திய துப்பாக்கிச்சூடு தாக்குதலில் 32 பேர் சுட்டுக் கொல்லப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
பாலஸ்தீனியர்களின் வாழ்விடமான காசா பகுதியில் மனிதாபிமானமற்ற நெருக்கடியான சூழ்நிலை நாளுக்கு நாள் தீவிரமாகி வருகிறது. ஆயுத மோதல்களால் உள்நாட்டுச் சுழற்சியில் சிக்கிக் கொண்டுள்ள மக்களுக்கு, உணவு மற்றும் மருந்து போன்ற அடிப்படை தேவைகளே கிடைக்காமல் நிலைமை மோசமாகியுள்ள நிலையில், அவசியமான உணவுப் பொருட்கள் கிடைக்கும் இடங்களை நோக்கி மக்கள் கூட்டமாகச் செல்கின்றனர்.
இந்நிலையில், காசா பகுதியில் உள்ள ஒரு உணவு விநியோக மையத்தில் உணவுப் பொருட்கள் வழங்கப்படுவதாகத் தகவல் அறிந்து, அப்பகுதியில் மக்கள் பெருமளவில் திரண்டனர். ஆனால், அந்த மக்கள்மீது இஸ்ரேல் பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்தத் துப்பாக்கிச்சூட்டில் 32 பேர் உயிரிழந்ததாகவும், பலர் படுகாயம் அடைந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. சுட்டுக் கொல்லப்பட்டவர்களில் பெண்கள், குழந்தைகள், முதியவர்களும் என அனைத்து தரப்பினரும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், தாக்குதலுக்குப் பின் வெளியான பவீடியோ காட்சிகளில், மணலில் சிதறிய கோதுமை மாவை போட்டிப்போட்டுக்கொண்டு மக்கள் சேகரிக்கும் பரிதாப காட்சி வெளியாகி மனதை உலுக்கியுள்ளது.
அந்தக் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி, உலகமெங்கும் மக்களின் உணர்வுகளை உலுக்கி விட்டன.
இந்நிலையில், ஐநா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் மற்றும் மனிதாபிமான அமைப்புகள் இந்தத் தாக்குதலைக் கடுமையாகக் கண்டித்து வருகின்றன. மக்களுக்கான அடிப்படை உரிமையான உணவு கிடைக்காமல் இது போன்ற கொடூர நிலைமைக்கு ஆளாக்கப்படும் இந்தச் சூழ்நிலையை முடிவுக்குக் கொண்டு வர, உலக நாடுகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்துவருகிறது.
இஸ்ரேல் தரப்பில் இதுகுறித்து எந்தவிதமான பதிலும் இதுவரை வெளியாகத சூழலில், காசாவில் நடைபெறும் இந்த நிகழ்வுகள் மேலும் பலரது உயிர்கள் பறிப்போகும் சூழல் நிலவுவது வருத்தமளிப்பதாக உள்ளது.