விழிப்புணர்வால் வெளிவந்த உண்மை.. 21 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை .. போக்சோ வழக்கில் அரசு பள்ளி ஆசிரியர் கைது! The truth revealed through awareness.. 21 female students were sexually harassed Government school teacher arrested in POCSO case

விழிப்புணர்வால் வெளிவந்த உண்மை.. 21 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை .. போக்சோ வழக்கில் அரசு பள்ளி ஆசிரியர் கைது!

உதகையில் அரசுப் பள்ளிக்கு பாலியல் கல்வி விழிப்புணர்வுக்கு சென்ற போலீசாரால், அங்குள்ள மாணவிகளுக்கு தாங்களும் பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்டது தெரியவந்துள்ளது. அரசு பள்ளியில் படிக்கும் 21 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அறிவியல் ஆசிரியர் கைது செய்யப்பட்டு நள்ளிரவில்  சிறையில் அடைக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

பாலியல் விழிப்புணர்வுக்கு பின்னர், ஆசிரியர் செந்தில் குமார் தகாத இடங்களில் தொட்டதாக 6 ஆம் வகுப்பு மாணவி போலீசாரிடம் கூறியதை அடுத்து நடத்தப்பட்ட தீவிர விசாரணையில், 20க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகில் உள்ள ஹோப் பார்க் பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 50). இவர் தமிழகம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் 23 ஆண்டுகளாக அறிவியல் ஆசிரியராக பணியாற்றி வந்துள்ளார்.  

இந்த நிலையில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் உதகை அருகே உள்ள ஒரு அரசு பள்ளியில்  பணியில் சேர்ந்தார்.‌ இவர் அந்தப் பள்ளியில் ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை அறிவியல் பாடம் எடுத்துள்ளார். 

இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் அந்த அரசு பள்ளிக்கு பாலியல் கல்வி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக போலீஸார் சென்றனர். 

அப்போது உடலில் நல்ல தொடுதல், (good touch) கெட்ட தொடுதல் (bad touch) குறித்து மாணவ- மாணவிகளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளது. இந்தநிலையில் பயிற்சி வகுப்பு முடிந்ததும் பள்ளியில் இருந்த ஆறாம் வகுப்பு படிக்கும் 12 வயது மாணவி ஒருவர் அறிவியல் ஆசிரியர் செந்தில்குமார், உடலில் தகாத இடத்தில் தொட்டு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் கூறியுள்ளார்.  

இதேபோல் பல மாணவிகளையும் அவர் மார்பு பகுதி மற்றும் உடலின் பின்புறம் உள்பட பல இடங்களில் தொட்டு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். மேலும் ஒரு சில நேரங்களில் மாணவிகளுக்கு முத்தம் கொடுத்ததாகவும் கூறப்படுகிறது. 

போலீசார் அளித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியின் முடிவில், பள்ளியில் படித்த 21 மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக புகார் வரவே அதிர்ச்சி அடைந்த போலீஸார் இது குறித்து  மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  நிஷா  உள்ளிட்ட அதிகாரிகளுக்கும், குழந்தைகள் நலப்பிரிவு அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவித்தனர்.  

புகாரின் பேரில் உதகை  ஊரக போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயா தலைமையிலான போலீஸார் விசாரணை நடத்தி போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து செந்தில்குமரை கைது  நள்ளிரவில் உதகை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

உதகையில் அரசுப் பள்ளிக்கு பாலியல் கல்வி விழிப்புணர்வுக்கு சென்ற போலீசாரால், அங்குள்ள மாணவிகளுக்கு தாங்களும் பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்டதாக தெரியவந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தை தொடர்ந்து, தமிழகம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு பாலியல் கல்வி குறித்த விழிப்புணர்வை வழங்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Previous Post Next Post

Post Ads 1

Post Ads 2

Travel with us!

News Editor's/Reporter's can join with our Desk Team. Publish your news now on 24×7. Reachout with your contact through editor@ipdtamil.com