மதுரையில் தவெக 2வது மாநாடு.. தவெக தலைவர் விஜய் அறிவிப்பு!
தவெக இரண்டாவது மாநில மாநாடு ஆகஸ்ட் 25-ம் தேதி மதுரையில் நடைபெறும் எனத் தவெக தலைவர் விஜய் அறிவித்தார்.
2026 சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கும் நிலையில், கடந்த ஆண்டு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் தவெக கட்சியின் முதல் மாநாட்டை விஜய் நடத்தினார். இந்நிலையில் சென்னையை அடுத்த பனையூரில், கடந்த 4ம் தேதி தவெக மாநில செயற்குழு கூட்டம் நடந்தது. அப்போது கூட்டத்தில் திமுக, பாஜகவுடன் கூட்டணி அமைக்கமாட்டோம் என விஜய் திட்டவட்டமாக அறிவித்தார்.
தவெகவின் 2வது மாநில மாநாட்டுக்கான பூமி பூஜை மதுரையில் இன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் தவெக பொதுச்செயலாளர் என்.ஆனந்த் பங்கேற்றார். இதையடுத்து மாநாட்டுக்கான பந்தக்கால் நடப்பட்டது. இந்நிலையில் தவெக இரண்டாவது மாநில மாநாடு ஆகஸ்ட் 25-ம் தேதி மதுரையில் நடைபெறும் என விஜய் தனது X தளத்தில் அறிவித்துள்ளார். வாகை சூடும் வரலாறு திரும்பட்டும் எனவும் வெற்றி நிச்சயம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதைத்தொடர்ந்து மதுரை எலிபார்பத்தியில் 200 ஏக்கர் பகுதியில் மாநாடு நடத்த அனுமதி கோரி, மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளரை சந்தித்து என்.ஆனந்த் மனு அளித்தார். இதையடுத்து மனு ஏற்கப்பட்ட ரசீது போலீசார் தரப்பில் கட்சியினரிடம் ஒப்படைக்கப்பட்டது.