நிதி மோசடி நடந்தது எப்படி? - தேவநாதன் யாதவிடம் பொருளாதார குற்றப் பிரிவு போலீஸார் தீவிர விசாரணை | Devanathan Yadav is being investigated by the Economic Offenses Wing

சென்னை: மயிலாப்பூர் நிதி நிறுவனத்தில் மோசடி நடைபெற்றது எப்படி என்று, காவலில் எடுக்கப்பட்ட தேவநாதன் யாதவிடம் பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.

சென்னை மயிலாப்பூர் தெற்கு மாடவீதியில் 150 ஆண்டுகள் பழமையான ‘தி மயிலாப்பூர் இந்து பெர்மனென்ட் பண்ட் லிமிடெட்’ என்ற பெயரில் நிதி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிதி நிறுவனத்தில் நிரந்தர வைப்பு தொகை உறுப்பினர்களாக 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உள்ளனர். பெரும்பாலும் மத்திய, மாநில அரசு ஊழியர்கள் மற்றும் முதியவர்கள் தங்களது ஓய்வூதிய பணத்தை அதிகளவில் இந்த நிதி நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளனர்.

இந்நிலையில், முதலீட்டாளர்களுக்கு வட்டித் தொகையும், முதிர்வுத் தொகையும் கொடுக்காமல் ஏமாற்றப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில், பாதிப்புக்குள்ளான 144 முதலீட்டாளர்கள் தங்களிடம் ரூ.24.5 கோடி பணத்தை பெற்று மோசடி நடைபெற்றுள்ளதாக சென்னை அசோக் நகரில் உள்ள தமிழக காவல் துறையின் பொருளாதாரக் குற்றப்பிரிவில் புகார் தெரிவித்தனர்.

அதன்படி அப்பிரிவு போலீஸார் கடந்த 12-ம் தேதி வழக்குப் பதிவு செய்தனர். இதன் தொடர்ச்சியாக மறுநாள், தி மயிலாப்பூர் இந்து பெர்மனென்ட் பண்ட் லிமிடெட் நிதி நிறுவன நிர்வாக இயக்குநர் தேவநாதன் யாதவ், இயக்குநர்கள் குணசீலன், மகிமை நாதன் ஆகியோரை அடுத்தடுத்து போலீஸார் கைது செய்தனர். பின்னர், அவர்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்நிலையில், மோசடி விவகாரம் தொடர்பாக மேலும் விசாரணை நடத்துவதற்காக கைதான தேவநாதன் யாதவ் உட்பட 3 பேரையும் பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் 7 நாள் காவலில் இன்று (ஆக.28) எடுத்தனர். இதன் தொடர்ச்சியாக அவர்களை அசோக் நகரில் உள்ள பொருளாதார குற்றப் பிரிவு அலுவலகத்துக்கு அழைத்துச் சென்று அங்கு வைத்து விசாரணை மேற்கொண்டனர்.

குறிப்பாக, பண மோசடி நடைபெற்றது எப்படி? மோசடி பணத்தில் பினாமிகள் பெயரில் சொத்துகள் வாங்கி குவிக்கப்பட்டதா? எந்தெந்த ஊரில் அசையும் மற்றும் அசையா சொத்துகள் வாங்கப்பட்டன, வேறு எந்தெந்த தொழில்களில் நேரடியாகவோ, மறைமுகமாகவோ ( பினாமிகள்) முதலீடு செய்யப்பட்டது என்பது உட்பட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தப்பட்டது. தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Source link

Previous Post Next Post

Post Ads 1

Post Ads 2

Swiggy

When Hunger Calls, Swiggy Delivers!