SENTHIL BALAJI BYEPASS SURGERY :செந்தில் பாலாஜிக்கு சர்ஜெரி முடிந்தது.! உடல்நிலை எப்படி உள்ளது? - "காவேரி மருத்துமனை" பதில்

சென்னை:

Senthil Balaji Byepass Surgery: பைபாஸ் அறுவை சிகிச்சைக்கு பின் அமைச்சர் செந்தில் பாலாஜியின் உடல்நிலை சீராக இருப்பதாக காவேரி மருத்துவமனையில் தரப்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில், “அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு இதய துடிப்பு கரோனரி தமனி பைபாஸ் அறுவை சிகிச்சை டாக்டர் ஏ. ஆர். ரகுராமால், செய்யப்பட்டது. இன்று காலை மூத்த ஆலோசகர் கார்டியோ தொராசிக் சர்ஜன் மற்றும் அவரது குழுவினரால் மேற்கொள்ளப்பட்டது. நான்கு பைபாஸ் கிராஃப்ட்ஸ் வைக்கப்பட்டு கரோனரி ரிவாஸ்குலரைசேஷன் நிறுவப்பட்டது. அவர் தற்போது அனைத்து ரீதியிலும் நலமாக உள்ளார் மற்றும் அறுவை சிகிச்சைக்குப் பின் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் பல்துறை குழுவால் இருதயநோய் தீவிர சிகிச்சை பிரிவில் கண்காணிக்கப்படுகிறார்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு இன்று அதிகாலை 5.15 மணி முதல் காலை 9.45 மணிவரை அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாக தகவல் கூறப்படுகிறது. அறுவை சிகிச்சைக்கு பின் அவர் மயக்கநிலையில் இருப்பதாகவும், வெண்டிலேட்டர் சப்போர்டில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

முன்னதாக பைபாஸ் சர்ஜரி குறித்து இருதய சிகிச்சை நிபுணர் மருத்துவர் அருண் கல்யாண சுந்தரம் கூறுகையில்,”பைபாஸ் அறுவை சிகிச்சை சுமார் 4 மணிநேரம் வரை நடைபெறும். இதில், ரத்த சர்க்கரை அளவு உள்ளிட்டவை கண்காணிக்கப்படும். சாதாரணமாக ஒருவர், ஒன்று முதல் இரண்டு நாட்கள் தீவிர சிகிச்சை பிரிவில் மருத்துவ கண்காணிப்பில் இருக்க வேண்டும்.

பைபாஸ் அறுவை சிகிச்சை செய்தால் ஒரு மாதம் வரை ஓய்வில் இருப்பது அவசியம். இயல்பு நிலைமைக்கு திரும்ப 3 மாதங்கள் வரை ஆகும். பைபாஸ் சிகிச்சை நடைமுறைகள் நோயாளிகளை பொறுத்து சற்று வேறுபடலாம். பைபாஸ் சிகிச்சை பெற்றவர்களை 7 நாட்களுக்கு பிறகு தான் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்வார்கள்” என தெரிவித்திருந்தார்.

எனவே, அமைச்சர் செந்தில் பாலாஜி சில காலம் தீவிர சிகிச்சை பிரிவில் மருத்துவ கண்காணிப்பில் இருந்து, ஒருவாரத்தில் வீடு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது. மருத்துவமனையின் அறிக்கையை தொடர்ந்து, அடுத்து அரசின் சார்பில் சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் செய்தியாளர் சந்திப்பை மேற்கொள்வார் என கூறப்படுகிறது.

அமைச்சர் செந்தில் பாலாஜி தனியார் மருத்துவமனைக்கு செல்ல அனுமதி உத்தரவு தவறானது என்றும் செந்தில் பாலாஜியை வெளியில் எடுத்து விசாரிக்கவும் அமலாக்கத்துறை உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இதில், செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா கேவியட் மனுவை தாக்கல் செய்திருந்த நிலையில், இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை நடைபெறுகிறது.

உச்ச நீதிமன்றத்தின் விடுமுறை கால அமர்வு இதனை விசாரிக்கும் நிலையில், இதில் செந்தில் பாலாஜியை தனியார் மருத்துவமனைக்கு மாற்றும் சென்னை உயர் நீதிமன்றத்தின் முடிவை தவறு என ஏற்க முடியாது என உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

Previous Post Next Post

Post Ads 1

Post Ads 2

Travel with us!

News Editor's/Reporter's can join with our Desk Team. Publish your news now on 24×7. Reachout with your contact through editor@ipdtamil.com