காவிரி ஆற்றில் மீனவர் வீசிய தோட்டா வெடியில் சிக்கி இளைஞர் பலி.!

சேலம்:

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே பூலாம்பட்டி காவிரி ஆற்றில் மீன் பிடிக்க மீனவர் வீசிய தோட்டா வெடியில் சிக்கி, ஆற்றில் குளித்துக் கொண்டு இருந்த இளைஞர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பலியான நிகழ்வு அப்பகுதியில் பரபரப்பான சூழ்நிலையை ஏற்படுத்தி உள்ளது. சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே பூலாம்பட்டி மற்றும் ஈரோடு மாவட்டம் நெருஞ்சிப்பேட்டையினை இணைக்கும் வகையில் காவிரி ஆற்றின் குறுக்கே கதவணை கட்டப்பட்டு அங்கு நீர்மின் உற்பத்தி நடைபெற்று வருகிறது. இக்கதவணை பகுதியில் அதிக அளவில் மீன் வளம் உள்ளதால், இப்பகுதியில் அதிக எண்ணிக்கையிலான உள்ளூர் மீனவர்கள் மீன் பிடித்து வருகின்றனர். இதில் ஒரு சில மீனவர்கள் பாறைகளை தகர்க்க பயன்படுத்தும் டெட்டநேட்டர் எனப்படும் (தோட்டா) வெடியினை பயன்படுத்தி மீன்களைப் பிடித்து வருகின்றனர்.

அணையின் பாதுகாப்பினை கருதியும், சட்ட விரோதமான முறையில் வெடிபொருள்களை கையாளுவதை தடுக்கும் நோக்கிலும் ஏற்கனவே இவ்வகையில் தோட்டா வெடி வீசி மீன் பிடிக்க போலீஸார் தடை செய்து இருந்த நிலையில், ஒரு சில மீனவர்கள் தொடர்ந்து காவிரி கதவணைப் பகுதியில் தோட்டா வெடிகளை வீசி மீன்பிடித்து வருகின்றனர்.பூலாம்பட்டி அடுத்த ஊத்துக்குளி காடு பகுதியைச் சேர்ந்த பெருமாள் (எ) முருகன் (40), என்ற மீனவர் சட்டவிரோதமான முறையில் காவிரிக் கதவணைப் பகுதியில் தோட்டா வெடி வீசி மீன் பிடித்துக் கொண்டிருந்தார். அப்போது அப்பகுதியில் ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த பள்ளிபாளையம் அருகே உள்ள ஆவரங்காடு, ஒட்டமெத்தை பகுதியைச் சேர்ந்த முருகன் மகன் மோகன் குமார் (22) என்ற இளைஞர் மீது மீனவர் பெருமாள் வீசிய தோட்ட தாக்கிய நிலையில், அவர் நிகழ்வு இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். இதனை அடுத்து அவருடன் வந்த அவரது நண்பரான பள்ளிபாளையம் பகுதியைச் சேர்ந்த பூபதி, மோகன் குமாரை மீட்க உதவி கேட்டு கூச்சலிட்ட நிலையில், அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து தண்ணீரில் ரத்த வெள்ளத்தில் மிதந்து மோகன் குமாரை சடலமாக மீட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த பூலாம்பட்டி போலீஸார் நிகழ்விடத்திற்கு விரைந்து சென்று, மோகன் குமாரின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

போலீஸாரின் விசாரணையில் பூபதி, மோகன் குமார் ஆகிய இருவரும் பூலாம்பட்டி அருகே உள்ள ஆணைபுலிகாடு பகுதியைச் சேர்ந்த மாதையன் என்பவர் வீட்டிற்கு விருந்தாளிகளாக வந்திருந்ததும். அவர்கள் அருகில் இருந்த காவிரி ஆற்றில் குளிக்கும் போது மீனவர் பெருமாள் வீசிய தோட்டாவில் வெடியில் சிக்கி மோகன் குமார் உயிரிழந்ததும் தெரியவந்தது. இதனை அடுத்து தோட்டா வீசி மீன்பிடித்த மீனவர் பெருமாளை பூலாம்பட்டி போலீஸார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காவிரி ஆற்றில் மூழ்கிக் குளித்துக் கொண்டிருந்த இளைஞர், மீனவர் வீசிய தோட்டா வெடியில் சிக்கி உயிரிழந்த நிகழ்வு பூலாம்பட்டி சுற்றுவட்டார பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

Previous Post Next Post

Post Ads 1

Post Ads 2

The Chennai Silks - Let the Celebrations Begin!

Silk Sarees- Buy Pure Silk and Soft Silk Sarees at The SCM Silk