சேலம்:
ஏற்காடு பலாக்காடு பகுதியை சேர்ந்தவர் கோவிந்தன் (வயது 47). விவசாயி. இவர் நேற்று தனது நிலத்தில் விவசாய பணிகளை செய்தார். பின்னர் மதியம் வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த கவுதம், உழவுப்பணியை முடித்து கொண்டு டிராக்டரில் வந்தார். இதையடுத்து அந்த டிராக்டரில் கோவிந்தன் ஏறினார்.
மேலும் அவருடன் அதே பகுதியை சேர்ந்த பழனிசாமி (45), பிரபாகரன் (40) ஆகியோரும் உடன் சென்றனர். அப்போது மேடான பகுதியில் ஏறியபோது, டிராக்டர் திடீரென நிலைதடுமாறி கவிழ்ந்தது. இதில் டிராக்டரின் அடியில் சிக்கி கோவிந்தன் பரிதாபமாக இறந்தார். பழனிசாமி, பிரபாகரன், கவுதம் ஆகியோர் காயம் அடைந்தனர்.
அவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த சேலம் ரூரல் துணை போலீஸ் சூப்பிரண்டு தையல்நாயகி மற்றும் ஏற்காடு போலீசார் அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
பின்னர் கோவிந்தன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். டிராக்டர் கவிழ்ந்து விவசாயி பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.