வேலூர்:
வேலூர் சி.எம்.சி.மருத்துவக் கல்லூரியில் ராக்கிங் நடைபெறவில்லை என மருத்துவமனை இயக்குநர் மறுப்பு தெரிவித்துள்ளார். வேலூர் சி.எம்.சி. மருத்துவமனை இயக்குநர் விக்ரம் மேத்யூ இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:–
வேலூர் சி.எம்.சி. மருத்துவக் கல்லூரியில் ‘ராக்கிங்’ நடைபெறவில்லை. யாரோ ஒருவர் கடிதம் அனுப்பியுள்ளார். ராக்கிங் நடைபெற்றதாக யாரும் புகார் தரவில்லை. இருந்தாலும் கல்லூரி நிர்வாகம் ஏழுபேரை சஸ்பெண்ட்செய்துள்ளது என்றார்.
அவர் மேலும் கூறியதாவது:–
சி.எம்.சி. மருத்துவமனை தொடங்கி 100 ஆண்டுகளை கடந்துவிட்டது. உலகம் முழுவதும் இருந்து ஏராளமான நோயாளிகள் வந்து சிகிச்சை பெற்று குணமடைந்து செல்கின்றனர். தற்போது வேலூரிலிருந்து 18 கி.மீ. தொலைவில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள கனிகாபுரத்தில் புதிய கட்டிடம் கட்டப்பட்டு அங்கு மருத்துவமனை மாற்றப்பட்டுள்ளது. இங்கு இதய நோய் பிரிவு, நரம்பியல் பிரிவு உள்ளிட்ட 13 துறைகள் மாற்றப்பட்டுள்ளன. எனவே வேலூரில் உள்ள சி.எம்.சி. மருத்துவமனையில் இதய நோய்க்கு சிகிச்சை அளிக்கப்படமாட்டது என்ற தேவையற்ற வதந்தி பரவி வருகிறது. அது உண்மை அல்ல. அங்கு 13 துறைகள் மற்றப்பட்டாலும், வேலூரில் அனைத்து அவசர சிகிச்சைகளும் அளிக்கப்படும்.
அறுவை சிகிச்சை உள்ளிட்டவை தேவைப்படும் பட்சத்தில் ஆம்புலன்ஸ் மூலம் டாக்டர் உதவியுடன் கனிகாபுரத்திற்கு நோயாளி அனுப்பி வைக்கப்படுவர். வேலூரில் உள்ள சி.எம்.சி. மருத்துவமனை கட்டிடம் 100 ஆண்டு பழைமை வாய்ந்தது என்பதால் அதை புதுப்பித்து மீண்டும் முழு அளவில் இங்கு நடத்தப்படும். இவ்வாறு அவர் பேட்டி அளித்தார்.
-மாவட்ட செய்தியாளர் சுரேஷ்குமார்