OTP நம்பரை சொல்ல இவ்ளோ லேட்டா.? - ஐடி ஊழியரை கொன்ற ஓலா ஓட்டுநர்.!

செங்கல்பட்டு:

ஓலா டாக்ஸி புக் செய்து காரில் ஏறிய ஐடி ஊழியர் ஓடிபி நம்பரை தேடி சொல்ல தாமதம். ஓ.டி.பி. வரவில்லை என்றால் காரை விட்டு இறங்குமாறு கூறி தகராறில் ஈடுபட்ட ஓட்டுநரின் செயல் கொலையில் முடிந்த விபரீதம்.

செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அடுத்த கன்னிவாக்கம் கிராமம், குந்தன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் உமேந்தர்(33). கோயம்புத்தூரில் உள்ள தனியார் மென்பொருள் நிறுவனத்தில் பொறியாளராக வேலை பார்த்து வந்தார். சனி, ஞாயிறு விடுமுறை என்பதால் கடந்த வெள்ளிக்கிழமை இரவு புறப்பட்டு சனிக்கிழமை காலை கன்னிவாக்கத்தில் உள்ள வீட்டிற்கு வந்துள்ளார்.

நேற்று ஞாயிற்றுகிழமை என்பதால் குடும்பத்துடன் சினிமா பார்ப்பதற்காக கன்னிவாக்கம் வீட்டிலிருந்து மனைவி பவ்யா (30), குழந்தைகள் அக்ரேஷ், கருண், பவ்யாவின் சகோதரி தேவிப்பிரியா மற்றும் அவரது இரு குழந்தைகள் உள்பட 7 பேர் ஓலா கார் மூலம் ஓ.எம்.ஆர். சாலையில் உள்ள மெரினா ஷாப்பிங் மாலுக்கு மாலை சென்றுள்ளனர்.

படம் பார்த்து விட்டு வீடு திரும்புவதற்காக பாவ்யாவின் சகோதரியான தேவிப் பிரியாவின் செல்போனில் இருந்து ஓலா கார் புக்கிங் செய்துள்ளனர். சிறிது நேரத்தில் இன்னோவா கார் வந்ததும் அனைவரும் அதில் ஏறியுள்ளனர். கார் ஓட்டுநர் ரவி என்பவர் ஓலா செயலிக்கு வந்த ஓ.டி.பி எண்ணை சொல்லுமாறு கேட்டுள்ளார். அப்போது ஓலா செயலியில் பார்க்காமல் தனது செல்போனில் உள்ள எஸ்.எம்.எஸ் இன்பாக்சில் உமேந்தர் ஓ.டி.பி.யை தேடியுள்ளார்.

இதனால் கோபமடைந்த கார் ஓட்டுநர் ஓ.டி.பி. எண் வரவில்லை என்றால் காரை விட்டு இறங்குமாறு கூறியுள்ளார். அதற்கு இறங்க முடியாது என்று கூறி உமேந்தரும் உடன் வந்தவர்களும் கார் ஓட்டுநரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

ஒரு கட்டத்தில் காரை விட்டு இறங்கிய உமேந்தர் காரின் கதவை வேகமாக சாத்தியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஓட்டுநர் ரவி ஏன் கார் கதவை வேகமாக சாத்தினாய்? என்று கேட்டு உமேந்தரை அடித்ததாக தெரிகிறது. அதேபோல் ஓட்டுநர் ரவியை கூல்ட்ரிங்ஸ் பாட்டிலால் உமேந்தர் திருப்பி அடித்ததாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த ரவி உமேந்திரை சரமாறியாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் நிலைகுழைந்து கீழே விழுந்த உமேந்தர் மீது ஏறி மீண்டும் கையால் குத்தியதாகவும் கூறப்படுகிறது. உமேந்தர் கீழே விழுந்ததும் ஓட்டுநரை உமேந்தர் குடும்பத்தினரும் சரமாறி தாக்கியுள்ளனர்.

இதனிடையே கீழே விழுந்த உமேந்தர் மயக்கமடைந்ததால் அங்கிருந்த பொதுமக்கள் அவரை மீட்டு கேளம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு ஆம்புலன் மூலம் அழைத்து சென்றுள்ளனர். அங்கு உமேந்திரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே அவர் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் சம்பவ இடத்தில் இருந்து தப்பி ஓட முயன்ற ஓலா டாக்ஸி ஓட்டுநர் ரவியை மடக்கிப்பிடித்த பொதுமக்கள் அவரை போலீஸாரிடம் ஒப்படைத்தனர். சேலம் அடுத்த ஆத்தூர், வ.உ.சி. நகரைச் சேர்ந்த ரவி(41) மீது வழக்கு பதிவு செய்த கேளம்பாக்கம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஓ.டி.பி நம்பரை சொல்ல தாமதமான காரணத்தால் மனைவி, குழந்தைகள் மற்றும் உறவினர்கள் கண் முன்னே ஐடி ஊழியர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

                                                                                                      – Arunachalam Parthiban

Previous Post Next Post

Post Ads 1

Post Ads 2

Travel with us!

News Editor's/Reporter's can join with our Desk Team. Publish your news now on 24×7. Reachout with your contact through editor@ipdtamil.com