எடப்பாடியின் சொந்த மாவட்டத்தில் கெத்து காட்டும் ஓபிஎஸ்.!

சேலம்:

சேலத்தில் ஓபிஎஸ் புகைப்படத்துடன் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. அதிமுகவில் எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ. பன்னீர்செல்வத்துக்கும் இடையே நிலவி வந்த உரசல் பூதாகரமாக வெடித்துள்ளது.கட்சி நிர்வாகிகளில் சிலர் ஓ.பன்னீர்செல்வம் பக்கமும் பலர் எடப்பாடி பழனிசாமி பக்கமும் அணிவகுத்துள்ளதால் கட்சி பிளவுபடும் சூழல் ஏற்பட்டுள்ளது. பொதுச்செயலாளர் பதவிக்காக நடைபெறும் இந்த சண்டையால் இரட்டை இலை சின்னமும், கட்சியின் கொடியும் முடங்கும் அபாயமும் உருவாகியுள்ளது.

இதனிடையே தமிழகத்தில் காலியாக உள்ள உள்ளாட்சி பதவிகளுக்கு வரும் 9-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள 2 மாவட்ட கவுன்சிலர், 20 ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர், 40 ஊராட்சி தலைவர்கள், 436 கிராம ஊராட்சி உறுப்பினர், நகர்புற உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள 2 மாநகராட்சி கவுன்சிலர், 2 நகராட்சி கவுன்சிலர், 8 பேரூராட்சி கவுன்சிலர் உள்ளிட்ட 510 பதவிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது.

இப்படிப்பட்ட சூழலில் தேர்தல் படிவங்களில் கையெழுத்திட தான் தயாராக உள்ளதாக எடப்பாடி பழனிசாமிக்கு ஓ.பன்னீர்செல்வம் கடிதம் எழுதியிருந்தார். அதில் எடப்பாடி பழனிசாமி கையெழுத்திட தயாரா? எனவும் கேள்வி எழுப்பியிருந்தார்.

இதனையடுத்து எடப்பாடி பழனிசாமியும் ஓ. பன்னீர்செல்வத்துக்கு எழுதிய கடிதத்தில் கடந்த 23.06.2022 அன்று நடைபெற்ற கழகப் பொதுக்குழுவில், 1.12.2021 அன்று நடைபெற்ற கழக செயற்குழுவால் கொண்டுவரப்பட்ட கழக சட்ட திட்ட திருத்தங்கள் அங்கீகரிக்கப்படவில்லை. ஆதலால், அந்த சட்ட திட்ட திருத்தங்கள் காலாவதி ஆகிவிட்டது. எனவே, கழக ஒருங்கிணைப்பாளர் என்ற உணர்வில் தாங்கள் எழுதியுள்ள கடிதம் செல்லத்தக்கதல்ல என குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் சேலம் மாவட்டத்தில் பல இடங்களில் ஓபிஎஸ் படத்தை மட்டும் வைத்து போஸ்டர் அடித்துள்ளனர். அதில் ஐயா இன்றி அணுவும் அசையாது போன்ற வாசகங்கள் இடம்பிடித்திருக்கின்றன. ஓபிஎஸ்ஸின் ஆள்களை கவர் செய்யும் முயற்சியில் எடப்பாடி இருக்க தற்போது அவரது சொந்த மாவட்டத்திலேயே ஓபிஎஸ்ஸுக்கு போஸ்டர்கள் முளைத்திருப்பது இபிஎஸ்ஸுக்கு அதிர்ச்சியைக் கொடுத்திருப்பதாக கூறுகின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.

                                                                                                                                       – க. விக்ரம்

Previous Post Next Post

Post Ads 1

Post Ads 2

Travel with us!

News Editor's/Reporter's can join with our Desk Team. Publish your news now on 24×7. Reachout with your contact through editor@ipdtamil.com