சேலம்:
அகில இந்திய அளவிலான தடகளப் போட்டியில் பெரியாா் பல்கலைக்கழக மாணவிகள் சாதனை படைத்துள்ளனா்.
அகில இந்திய அளவிலான மகளிா் தடகளப் போட்டிகள் ஒடிசா, புவனேசுவரம் பல்கலைக்கழகத்தில் அண்மையில் நடைபெற்றது. இதில் பெரியாா் பல்கலைக்கழக மாணவி வி. பவித்ரா கம்பு ஊன்றி தாண்டும் போட்டியில் முதலிடம் பிடித்து தங்கப்பதக்கம் வென்று புதிதாக தேசிய சாதனையையும் நிகழ்த்தினாா்.
இதேபோல பெங்களூரில் நடைபெற்ற கேலோ இந்தியா போட்டியிலும் மாணவி பவித்ரா முதலிடம் பிடித்துள்ளாா். சாதனை படைத்த மாணவி பவித்ரா, சேலம் ரயில்வே கோட்டத்தில் பணி வாய்ப்பும் பெற்றுள்ளாா். பல்வேறு சாதனைகளை நிகழ்த்தியுள்ள மாணவி பவித்ராவைப் பாராட்டி, பெரியாா் பல்கலைக்கழக துணைவேந்தா் இரா. ஜெகநாதன் ரூ. 10 ஆயிரம் ரொக்கம், சான்றிதழை புதன்கிழமை வழங்கினாா்.
பளுதூக்கும் பிரிவில் 3 ஆம் இடம் பிடித்து வெண்கலப் பதக்கம் வென்ற மாணவி டி. ஹரிணிப் பிரியாவுக்கு ஊக்கத்தொகையாக ரூ. 2 ஆயிரம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் பதிவாளா் த. கோபி, உடற்கல்வி இயக்குநா் க. வெங்கடாசலம், அணி மேலாளா் எஸ். கண்ணன் ஆகியோா் உடனிருந்தனா்.
-Naveenraj