சென்னை:
சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இயங்கி வரும் ஆர்த்தி ஸ்கேன் மையங்களில் வருமான வரித்துறையினர் திடீர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
உயர்தர மருத்துவ பகுப்பாய்வு படம் எடுத்தல் மையமான ‘ஆர்த்தி ஸ்கேன்’ பல்வேறு மாநிலங்களில் தனது கிளைகளை பரப்பி இயங்கி வருகிறது. மேலும், டாட்டா கேப்பிட்டல் குரூப் ஆர்த்தி ஸ்கேன் நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளது. இதற்கிடையே, ஆர்த்தி ஸ்கேன் நிறுவனம் வரி ஏய்ப்பில் ஈடுபடுவதாக வருமான வரித்துறையினர் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது.
இதன் அடிப்படையில் சென்னையில் வடபழனி, அசோக் நகர், கீழ்ப்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இயங்கி வரக்கூடிய ஆர்த்தி ஸ்கேன் நிறுவனம் மற்றும் மருத்துவர்களின் வீடுகளில் காலை 6.30 மணி முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த சோதனையானது தொடர் வரி ஏய்ப்பு செய்ததாக கூறி வந்த புகாரின் அடிப்படையில் நடைபெற்று வருவதாக வருமானவரித்துறை அதிகாரிகளின் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் சில முக்கிய ஆவண குறிப்புகளின் அடிப்படையில் இந்த சோதனையை மேற்கொள்ளப்படுவதாகவும் வருமான வரித்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக இந்த சோதனையில் 50க்கும் மேற்பட்ட அதிகாரிகள் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும்,வெளிமாநிலங்களான கேரளா, கர்நாடகா, ஆந்திரா, கொல்கத்தா உள்ளிட்ட இடங்களில் ஆர்த்தி ஸ்கேன் சென்டர்கள் மற்றும் மருத்துவர்களின் வீடுகளில் சோதனை நடைபெறுவதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன.
– Gowtham Natarajan