எம்ஜிஆரும், ஜெயலலிதாவும்தான் தீர்ப்பு வழங்கினார்கள்..! - எம்.பி., ரவீந்திரநாத்

சென்னை:

அதிமுக பொதுக்குழு தொடர்பாக எம்ஜிஆரும், ஜெயலலிதாவும்தான் தீர்ப்பளித்திருக்கிறார்கள் என ஓபிஎஸ் மகனும், எம்.பியுமான ரவீந்திரநாத் தெரிவித்துள்ளார்.

அதிமுக பொதுக்குழு வானகரத்தில் இன்று நடக்கவிருக்கிறது. 2,750 உறுப்பினர்கள் கலந்துகொள்ளவிருக்கும் இப்பொதுக்குழுவிலேயே பொதுச்செயலாளர் ஆகிவிடுவது என்று கணக்கு போட்டு எடப்பாடி பல வேலைகளை செய்தார்.

ஓபிஎஸ் இறங்கிவந்தும் ஒற்றைத் தலைமைதான் என முஷ்டி முறுக்கிய எடப்பாடி பழனிசாமிக்கு அதிர்ச்சியளிக்கும் விதமாக நீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியது.

பொதுக்குழுவை நடத்துவதற்கு தடை விதிக்க வேண்டுமென ஓபிஎஸ் தரப்பு தாக்கல் செய்த மனு சென்னை உயர் நீதிமன்றத்தில் முதலில் தள்ளுபடி செய்யப்பட்டது. இதனையடுத்து ஓபிஎஸ் தரப்பு மேல்முறையீடுக்கு சென்றது.

மேல்முறையீட்டு மனுவை நேற்று நள்ளிரவு விசாரித்த நீதிமன்றம், பொதுக்குழுவில் புதிய தீர்மானம் எதையும் நிறைவேற்றக்கூடாது. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஒத்துக்கொண்ட 23 தீர்மானங்களைத் தவிர வேறு எதிலும் புதிய முடிவு எடுக்கக்கூடாது என தீர்ப்பில் குறிப்பிட்டிருக்கிறது.

நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு எடப்பாடியின் பொதுச்செயலாளர் கனவுக்கு கடிவாளம் போட்டதாகவே கருதப்படுகிறது.  இந்நிலையில் தீர்ப்பு குறித்து பேசிய ஓ.பன்னீர்செல்வத்தின் மகனும், எம்.பியுமான ஓ. ரவீந்திரநாத், “மேல் முறையீட்டு வழக்கில் கிடைத்திருக்கும் தீர்ப்பு சிறந்த தீர்வு.

இது ஒன்றரை கோடி தொண்டர்களுக்கும் கிடைத்த வெற்றி. தீர்ப்பு வழங்கிய இரண்டு நீதிபதிகளை எம்ஜிஆர், ஜெயலலிதாவாகத்தான் பார்க்கிறோம்.இன்றைய பொதுக்குழுவில் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் பங்கேற்கிறார்” என்றார்.

இந்தச் சூழலில் செய்தியாளர்களிடம் பேசிய ஓ. பன்னீர்செல்வம், “அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு செல்வேன் ,வரவுசெலவுத் திட்டக் கணக்கை தாக்கல் செய்ய வேண்டும்,அதை நான்தான் செய்ய வேண்டும்” என கூறினார்.

                                                                                                                               – க. விக்ரம்

Previous Post Next Post

Post Ads 1

Post Ads 2

The Chennai Silks - Let the Celebrations Begin!

Silk Sarees- Buy Pure Silk and Soft Silk Sarees at The SCM Silk