காதலிப்பது போல் நடித்து பெண்களை ஆபாச படம் எடுத்து மோசடி - இளைஞர் கைது..!

சென்னை:

Crime : சமூக வலைதளங்கள் மூலம் பழகி 30-க்கும் மேற்பட்ட பெண்களிடம் காதலிப்பது போல் ஏமாற்றி ஆபாச வீடியோ எடுத்து மோசடி செய்த நபரைக் காவல்துறையினர் கைது செய்தனர்.

சென்னையைச் சேர்ந்த பின்னணிக் குரல் கலைஞராக பணிபுரியும் இளம்பெண் ஒருவர், விக்ரம் வேதகிரி என்ற நபர் சமூக வலைதளம் மூலம் தன்னிடம் பழகி திருமணம் செய்துகொள்வதாகக் கூறி மோசடி செய்ததோடு வேறொரு பெண்ணைத் திருமணம் செய்ய முயற்சித்ததாக சென்னை வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்தார்.

2016-ம் ஆண்டு அப்பெண்ணுக்கு விவாகரத்து ஆன நிலையில், 2020-ம் ஆண்டு குறும்படம் ஒன்றுக்கு வாய்ஸ் ஓவர் ஆர்ட்டிஸ்ட் தேவைப்படுவதாகக் கூறி சென்னை திருநின்றவூரைச் சேர்ந்த விக்ரம் வேதகிரி அவரை அணுகியுள்ளார். தனக்கும் விவாகரத்தானதாகக் கூறிய விக்ரம் வேதகிரி, நாளடைவில் அப்பெண்ணை காதலிப்பதாகவும் கூறியுள்ளார். பின்னர், இருவரும் ரகசியத் திருமணம் செய்து கொண்ட நிலையில், பெண்ணின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து இருவரும் சேர்ந்து வாழத் தொடங்கிய நிலையில், விரைவில் ஊரறியத் திருமணம் செய்து கொள்வதாக விக்ரம் வேதகிரி உறுதியளித்துள்ளார். விக்ரமின் உடைந்த செல்போன் ஒன்றை  சரி செய்து பார்த்த போது, அதில் ஆபாசப் புகைப்படங்களும், அவர் பல பெண்களை ஆபாசமாக வீடியோ எடுத்து வைத்திருந்ததும் தெரியவந்தது. பெண்களை காதலிப்பது போல் நடித்து அவர்களுடன் நெருக்கமாக இருப்பதை வீடியோ எடுத்து வைத்திருப்பதை விக்ரம் வேதகிரி வாடிக்கையாகக் கொண்டுள்ளார்.

சமூக வலைதளம் மூலம் குறும்படத்திற்கு நடிக்க அழைப்பது போன்று விக்ரம் வேதகிரி பல பெண்களுக்கு வலை விரித்தது அவரது செல்போன் உரையாடல்கள் மூலம் தெரியவந்துள்ளது. குறிப்பாக குடும்ப உறவில் பிரச்சனை உள்ள பெண்கள், சினிமா ஆசை உள்ள பெண்கள் என 30 வயதுக்கு மேற்பட்ட பெண்களைக் குறிவைத்த விக்ரம், முகநூல், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களின் மூலம் அவர்களைத் தொடர்புகொண்டு பேசியுள்ளார்.

மேலும், புகாரளித்த பின்னணிக் குரல் கலைஞரை ஆபாசமாக வீடியோ எடுத்ததோடு, அதை சமூகவலைதளத்தில் வெளியிடாமல் இருக்க ரூ.பத்து லட்சம் கேட்டு மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. இதையெல்லாம் மறைத்து விக்ரம் நாளை வேறொரு பெண்ணைத் திருமணம் செய்யவுள்ளதாகவும், அந்த திருமணத்தை தடுத்து நிறுத்தி அப்பெண்ணின் வாழ்க்கையைக் காப்பாற்ற வேண்டும் எனவும் பாதிக்கப்பட்ட பெண் கூறினார்.

மேலும், விக்ரம் தன்னை ஏமாற்றியது தொடர்பாக ஏற்கனவே வில்லிவாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால், தற்போது காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளதாகவும், பயம் காரணமாக பெரும்பாலான் பெண்கள் புகார் அளிக்க முன்வரவில்லை எனவும் அவர் கூறினார். விக்ரமால் மற்றொரு பெண் பாதிக்கப்படாமல் இருக்கவே தானாக முன்வந்து புகாரளித்துள்ளதாகவும், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என நம்புவதாகவும் அவர் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து, வில்லிவாக்கம் அனைத்து மகளிர் போலீசார், திருநின்றவூரில் உள்ள வீட்டில் வைத்து விக்ரம் வேதகிரியைக் கைது செய்தனர். அவர் மீது பெண் வன்கொடுமை, மோசடி உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

                                                                                                                    – Chithira Rekha 

Previous Post Next Post

Post Ads 1

Post Ads 2

The Chennai Silks - Let the Celebrations Begin!

Silk Sarees- Buy Pure Silk and Soft Silk Sarees at The SCM Silk