தமிழகத்தில் பள்ளிப் பேருந்துகளின் நிலை என்ன.? - கோவை முழுவதும் ஆய்வு..!

கோவை:

Status Of SchoolBus: தமிழகம் முழுவதும் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் தனியார் பள்ளிகளின் வாகனங்கள் முறையாக பராமரிக்கப்படுகிறதா ? முதலுதவிக் கருவிகள் அனைத்தும் உள்ளதா?

தமிழகம் முழுவதும் அரசுப் பள்ளிகள் முதல் தனியார் பள்ளிகள் வரை திறக்கப்பட்டு வகுப்புகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இந்நிலையில், பெரும்பாலானோர் குழந்தைகளையும், மாணவர்களையும் தனியார் பள்ளி பேருந்துகளில் அனுப்புவது இயல்பாகிவிட்டது. இந்நிலையில், தனியார் பள்ளிகள் தங்களது பள்ளி வாகனங்களை முறையாக பின்பற்றுகிறதா ? என போக்குவரத்துத் துறை சார்பில் ஆய்வு மேற்கொள்ளும் பணி தொடங்கியுள்ளது. பள்ளிகளின் போதிய பராமரிப்பின்மை காரணமாகவும், அலட்சியம் காரணமாகவும் குழந்தைகளுக்கு நேரும் அசம்பாவிதங்களை தவிர்க்கும் வகையில் போக்குவரத்துத் துறை சார்பில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆட்சிக் காலங்களில் கோடை விடுமுறை முடிந்து பள்ளி திறப்பிற்கு முன்னரே தனியார் பள்ளி, கல்லூரி வாகனங்கள் போக்குவரத்துத்துறை சார்பில் அவசர கால வழி, சிசிடிவி கேமரா, தீயணைப்பு கருவி, முதலுதவி பெட்டி, வாகனங்களின் நிலை குறித்து முறையாக ஆய்வு செய்யப்பட்ட பின்னரே இயங்க அனுமதிக்கப்பட்டு வந்தது. ஆனால்,நடப்பாண்டில் 1 முதல் 9 ஆம் வகுப்பு வரை கோடை விடுமுறைக்கு பின்னர் கடந்த 13 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டன. ஆனால்,பள்ளிகள் திறந்து கிட்டத்தட்ட ஒருவார காலமாகியுள்ள நிலையில் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் வட்டாரப்போக்குவரத்து துறை சார்பில் அன்னூர்,மேட்டுப்பாளையம்,பெரியநாயக்கன்பாளையம், காரமடை, சிறுமுகை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் செயல்பட்டு வரும் 55 தனியார் பள்ளிகளுக்கு சொந்தமான 390 வாகனங்கள் இன்று ஆய்வு செய்யப்பட்டன.

மேட்டுப்பாளையம் வட்டாட்சியர் மாலதி  தலைமையில் டிஎஸ்பி பாலமுருகன்,மோட்டார் வாகன ஆய்வாளர் சிவக்குமார் உள்ளிட்டோர் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்தனர். ஆய்வின் போது சிசிடிவி கேமராக்கள் முறையாக இயங்குகிறதா ? ,தீயணைப்புக்கருவிகள், முதலுதவி பெட்டி காலாவதியாக உள்ளதா ?  அவசர கால வழி முறையாக செயல்படுகிறதா ? பள்ளி வாகனங்களில் படிக்கட்டுகள் முறையாக பராமரிக்கப்படுகின்றனவா ? என்பது உள்ளிட்ட பல்வேறு சோதனைகள் நடைபெற்றன.

அப்போது, முதலில் ஆய்வு மேற்கொண்ட 5 வாகனங்களிலேயே அவசர கால வழி முறையாக செயல்படவில்லை என்பது தெரியவந்துள்ளது. காலாவதியான முதலுதவி மருந்துகள், காலாவதி தேதியே இல்லாத தீயணைப்புக்கருவி உள்ளிட்டவை இருந்ததை கண்ட டிஎஸ்பி பாலமுருகன் சிறுமுகை ஆலாங்கொம்பு பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியின் 4  வாகனங்கள் இயங்குவதற்கு தடை விதித்தார். மேலும்,ஒருவார காலத்திற்கு பின்னர் வாகனங்களை மீண்டும் சரி செய்து ஒப்படைக்க வலியுறுத்தினார்.

அதுமட்டுமல்லாமல், வாகன ஓட்டுநர்களிடம் போக்குவரத்து விதிமுறைகளை முறையாக கடைபிடிக்க வேண்டும் என்றும், குழந்தைகளை பாதுகாப்பாக ஏற்றி,இறக்க வேண்டும் என்றும் போலீஸார் அறிவுறுத்தினர்.

                                                                                                                            – நவீன் டேரியஸ்

Previous Post Next Post

Post Ads 1

Post Ads 2

Travel with us!

News Editor's/Reporter's can join with our Desk Team. Publish your news now on 24×7. Reachout with your contact through editor@ipdtamil.com