கன்னியாகுமரி :
கன்னியாகுமரியில் 4வயது பெண் குழந்தை பாம்பு கடித்து பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் குட்டைக்குழி அடுத்த குட்டைக்காடு பாலவிளையைச் சேர்ந்தவர் சுரேந்தின். கூலித்தொழிலாளியான இவருக்கு சிஜிமோள் என்ற மனைவியும் 3 பெண் பிள்ளைகளும் உள்ளனர். மதுவுக்கு அடிமையான சுரேந்திரன் தினமும் மது அருந்திவிட்டு மனைவி குழந்தைகளை அடிப்பதை வழக்கமாக வைத்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று தலை நிற்காமல் குடித்துவிட்டு வந்த, சுரேந்திரன் வழக்கம்போல மனைவியை அடிக்க முயன்றுள்ளார். அப்போது மனைவி சிஜிமோள் அலறியடித்து ஓடியிருக்கிறார்.
இதை பார்த்து பயந்த குழந்தைகள் அருகில் உள்ள ரப்பர் தோட்டத்திற்குள் நுழைந்தன. அப்போது எதிர்பாராதவிதமாக 4வயது குழந்தை சுஷ்விஷா மோளை விஷபாம்பு கடித்துள்ளது. இது குறித்து குழந்தை அழுதுகொண்டே கூறியதையடுத்து அக்கம்பக்கத்தினர் குழந்தை சுஷ்விகா மோளை மீட்டு ஆசாரிபள்ளம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருவட்டார் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், 4வயது பெண் குழந்தை பாம்பு கடித்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
– Gowtham Natarajan