சென்னை:
சென்னை மாநகர பேருந்துகளில் ‘ரூட்டு தல’ பிரச்சனை. ஆயுதங்கள் கொண்டு சென்ற மாணவர்களை கைது செய்தது போலீஸ்.
சென்னை மாநகர பேருந்துகளில் ‘ரூட்டு தல’ விவகாரம் காவல்துறைக்கும், மக்களுக்கும் என்றுமே தீராத தலைவலியாகவே இருந்து வருகிறது. தாங்கள் செல்லும் பேருந்து வழித்தடத்தில் தங்களது கல்லூரிதான் கெத்து என்பதை நிரூபிக்க அவர்கள் செய்யும் ரவுடியிசம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டேதான் போகிறது.
இந்த நிலையில் இன்று காலை பேருந்துகளில் ரகளையில் ஈடுபட்ட பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் 25 பேரை காவல்துறையினர் பிடித்து விசாரித்து வருகின்றனர். அவர்களில் நான்கு மாணவர்களின் பைகளில் பட்டாக் கத்திகள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் இருந்ததையும் கண்டறிந்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
பூந்தமல்லியில் இருந்து திருத்தணி செல்லும் பேருந்தில் இன்று காலை ரூட்டு தல யார் என்பதை தீர்மானம் செய்வது குறித்து மோதல் ஏற்பட்டுள்ளது. இதனை செய்தது பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் என்பதை அறிந்த போலீஸார் கல்லூரி வாசலில் வைத்து அவர்களை காவல்நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அதில் 4 பேரிடம் பட்டாக் கத்திகள் இருந்ததால் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மாணவர்கள் இளம் வயதிலேயே இப்படி ரவுடியிசத்தில் ஈடுபடுவது குறித்து கல்லூரி நிர்வாகம் கடுமை காட்ட வேண்டும் என மக்கள் விரும்புகின்றனர். ஆனால் சிறிய வயது இளைஞர்களாக இருப்பதால் செய்வதறியாது போலீசாரும், காவல்துறையினரும் திகைத்து வருகின்றனர்.
– Tamil Arasan