மு.க.ஸ்டாலின் பேசிய ஆங்கிலத்தை கேட்டு பிரதமர் மோடி பயந்துவிட்டார் - அண்ணாமலை..!

நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசிய ஆங்கிலத்தை கேட்டு பிரதமர் மோடி பயந்துவிட்டதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.

கடந்த  21-ம் தேதி, நாடு முழுவதும் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.9.50, டீசல் விலை லிட்டருக்கு ரூ.7 குறைத்து மத்திய அரசு உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து மாநில அரசுகளும் பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க வேண்டும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வலியுறுத்தினார். தமிழக அரசு 72 மணி நேரத்திற்குள் பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்கவில்லை என்றால், தலைமைச் செயலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அறிவித்திருந்தார்.

அதன்படி தமிழகத்தில் அரசு பெட்ரோல்-டீசல் விலை குறைக்க வலியுறுத்தி பாஜக சார்பில் இன்று கோட்டை நோக்கி கண்டன பேரணி நடைபெற்றது. எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் இருந்து கோட்டையை நோக்கி பாஜகவினர் பேரணியாக சென்றனர். இதில், சென்னை திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான பாஜக தொண்டர்கள் பங்கேற்றனர்.

பிற்பகல் 12 மணியளவில் பாஜக தலைவர் அண்ணாமலை போராட்ட மேடைக்கு வந்தார். அப்போது உரையாற்றிய அவர், ”திமுக அறிவித்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என கடந்த ஓர் ஆண்டு காலமாக வலியுறுத்தி வருகிறோம். எந்த வாக்குறுதியுமே அறிவிக்காத பிரதமர் நரேந்திர மோடி பெட்ரோல் டீசல் விலையை இரண்டு முறை குறைத்துள்ளார்.

கடந்த 6 மாத காலத்தில் பெட்ரோல் விலை ரூ.14.50, டீசல் விலை ரூ.17 குறைத்து மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. ஆனால் ஆளும் திமுக அரசு ஏற்கெனவே அறிவித்தபடி பெட்ரோல் – டீசல் விலையை குறைக்க மறுத்து வருகிறது. 4 நாட்களுக்கு முன் பொதுகூட்டம் ஒன்றில் பேசிய திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பெட்ரோல் – டீசல் விலை குறைப்பை பற்றி ஏன் முதலமைச்சரிடம் கேட்கிறீர்கள்? திமுக தேர்தல் அறிக்கையை தயார் செய்தது மக்களை உறுப்பினர் டி.ஆர்.பாலு தான். எனவே தேர்தல் வாக்குறுதிகள் தொடர்பாக டி.ஆர்.பாலுவிடம் தாம் கேட்க வேண்டும் என ஆர்.எஸ்.பாரதி கூறினார்.

ஆர்.எஸ்.பாரதி கூறியதை பாஜக முழுமையாக ஏற்றுக்கொள்கிறது. எனவே, தேர்தல் வாக்குறுதி அளித்த டி.ஆர்.பாலுவை முதலமைச்சர் ஆக்கினால் அவரிடம் பாஜக கேள்வி எழுப்ப தயாராக உள்ளது. முதலமைச்சரின் முதல் எதிரி ஆர்.எஸ்.பாரதி தான். அவருக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி கிடைக்காத விரக்தியில் மு.க.ஸ்டாலினின் முதலமைச்சர் பதவி காலியாக வேண்டும் எனும் நோக்கில் பேசி வருகிறார்.

திமுக அரசு பெட்ரோல் டீசல் விலையை குறைக்காத வரை நான் விடப்போவது கிடையாது. இந்த அரசின் நாட்கள் எண்ணப்பட்டுக் கொண்டிருக்கின்றன.  இன்னும் 750 நாட்களில் திமுக அரசு அகற்றப்படும். திமுக ஆட்சியில் கஞ்சா தலைநகரமாக தமிழகம் மாறிக்கொண்டுள்ளது. சாதாரண மக்கள் வீதியில் நடந்து செல்லவே பயப்படுகிறார்கள். யார் எப்போது யாரை வெட்டிக்கொல்வார்கள் என மக்கள் அச்சத்துடன் உள்ளனர்.

பிரதமரை மேடையில் வைத்துக்கொண்டு முதல்வர் என்ன வேண்டுமானாலும் பேசலாம். ஆனால் அதை கேட்க மக்கள் தயாராக இல்லை.கருவாட்டை விற்பது போல கட்சத்தீவை தாரைவார்த்து விட்டார்கள். இப்போது மீட்க போகிறேன் என சொல்கிறார்கள்.திமுகவால் ஒரு போதும் கட்சத்தீவை மீட்க முடியாது.

கட்சத்தீவு விவகாரத்தை பா.ஜ.க கையில் எடுத்துள்ளது அதை எப்படி மீட்க வேண்டும் என மோடிக்கு தெரியும். நிச்சயம் மீட்போம். திமுக அரசில் நடைபெறும் ஊழல் குறித்து அடுத்த நான்கு நாட்களில் பாஜக ஆதாரங்களை வெளியிடும். அமைச்சர்கள் எல்லாம் தங்களுக்கு ஆங்கிலம் தெரியும் என ரைம்ஸ் பாடுகிறார்கள். தாய் மொழியான தமிழ்மொழி நமக்கு வேண்டும். அதேநேரம் முதலமைச்சர் உள்ளிட்ட அமைச்சர்கள் ஆங்கிலம் பேசுவதை கேட்டால் பயமாக உள்ளது.

நேரு உள்விளையாட்டு அரங்கில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசிய ஆங்கிலத்தை கேட்டு பிரதமர் மோடி பயந்துவிட்டார். மு.க.ஸ்டாலின் பேசிய பேச்சை கேட்டு பிரதமர் பயந்துவிட்டதாக திமுகவினர் கூறுகின்றனர். ஆனால் முதலமைச்சர் பேசிய ஆங்கிலத்தை கேட்டு அந்த பயத்தில் தான் பிரதமர் டெல்லி சென்றுவிட்டார். பிரதமர் மட்டும் அல்ல அந்த ஆங்கிலத்தை கேட்டு தமிழ்நாடே பயந்துவிட்டது.

எனவே மக்களை பிற மொழிகள் கற்க அனுமதிக்க வேண்டும். அவர்களுக்கு ஆங்கிலம் வேண்டுமா? தெலுங்கு வேண்டுமா?கன்னடம் வேண்டுமா? மலையாளம் வேண்டுமா அல்லது இந்தி வேண்டுமா? என்பதை மக்களே முடிவு செய்வார்கள். இது தான் புதிய கல்விக்கொள்கையின் சாராம்சம் என்பதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புரிந்துகொள்ள வேண்டும்.” இவ்வாறு அண்ணாமலை தெரிவித்தார்.

– Arunachalam Parthiban

Previous Post Next Post

Post Ads 1

Post Ads 2

The Chennai Silks - Let the Celebrations Begin!

Silk Sarees- Buy Pure Silk and Soft Silk Sarees at The SCM Silk