அத்து மீறும் காதல் ஜோடிகள் அருவெறுப்பில் பொதுமக்கள்..!

தஞ்சாவூர்:

தஞ்சை ராஜராஜ சோழன் மணிமண்டபத்தில் காதல் ஜோடிகள் அத்துமீறுவதால் பொதுமக்கள் அருவெறுப்பில் உள்ளனர். இத்தகைய செயலில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
ராஜராஜ சோழன் மணிமண்டபம்
தஞ்சையில் 1995-ம் ஆண்டு 8-வது உலக தமிழ் மாநாடு நடந்தது.  இந்த மாநாட்டின்போது, தஞ்சையை ஆட்சி செய்த சோழ மன்னர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் தஞ்சை-புதுக்கோட்டை சாலையில் ராமநாதன் ரவுண்டானா அருகே மணிமண்டபம் கட்டப்பட்டது.  தமிழக அரசு பொதுப்பணித்துறை சார்பில் கட்டப்பட்ட இந்த மணிமண்டபத்தில் பூங்கா, கோபுரம், ராஜராஜன் அகழ்வைப்பகம் என்று சுற்றுலா பயணிகள், மக்களை கவரும் வகையில் அமைக்கப்பட்டது.
கோபுரம் போன்று 5 அடுக்குகள் கொண்ட ராஜராஜ சோழன் அகழ்வைப்பகத்திற்கு செல்ல தனியாக படிக்கட்டுகள் உள்ளன. மேலும் சிறுவர்களை கவரும் வகையில் செயற்கை நீரூற்று, சிறுவர்களுக்கான ரெயில், ஊஞ்சல் என பல்வேறு விளையாட்டு உபகரணங்கள் அமைக்கப்பட்டன. மணிமண்டபத்திற்கு நுழைவு கட்டணமாக 12 வயது மேற்பட்டவர்களுக்கு ரூ.5 வசூல் செய்யப்பட்டு வருகிறது. .
அத்துமீறும் காதல் ஜோடிகள்; அருவெறுக்கும் மக்கள்
இந்த மணிமண்டபத்திற்கு தினமும் நூற்றுக்கு மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். அதே நிலையில் காதல் ஜோடிகளும் அதிக அளவில் இங்கு வந்து குவிகின்றனர். பெற்றோர் மற்றும் உறவினர்கள், தெரிந்தவர்களின் கண்களில் சிக்காமல் மறைவான இடத்தை தேடி வரும் காதல் ஜோடிகளுக்கு தஞ்சை ராஜராஜன் மணிமண்டபம் தற்போது புகலிடமாக மாறி விட்டது.
இங்கு வரும் காதலர்கள் ஜோடி ஜோடியாக ஆங்காங்கே அமர்ந்து செய்யும் அத்துமீறிய செயல்கள் இங்கு வரும் பொதுமக்கள் அருவெறுக்கத்தக்க வகையில் உள்ளது. ஒரு சில காதல் ஜோடிகளின் எல்லைமீறிய செயல்களால் இங்கு வரும் பொதுமக்கள் அதிர்ச்சியில் உறைந்து போய் விடுகிறார்கள். தங்களது குழந்தைகளுடன் இங்கு வரும் பொதுமக்கள் முகம் சுளிக்கும் வகையில் காதலர்களின் செயல்கள் உள்ளது.

சமூக விரோத செயல்கள்

ராஜராஜ சோழன் அகழ்வைப்பகம் கோபுரத்தின் மேல் செல்லும் காதலர்கள் எல்லை மீறுகின்றனர். முன்பு சிவகங்கை பூங்காவில் இதுபோன்ற கண்றாவி செயல்கள் அரங்கேறி வந்தது. தற்போது சிவகங்கை பூங்காவில் பணிகள் நடப்பதால் இந்த பூங்கா தற்காலிகமாக மூடப்பட்டு உள்ளது. இதனால் காதலர்கள் தங்களது இருப்பிடத்ைத மாற்றி ராஜராஜன் மணிமண்டபத்துக்கு அலை, அலையாக வந்து செல்கிறார்கள்.
மேலும் சிலர் மது குடிப்பது, அங்கேயே சிறுநீர் கழிப்பது உள்ளிட்ட சமூக விரோத செயல்களையும் செய்து விடுகின்றனர். கோபுரத்தின் சுவர்களில் கரிக்கட்டை, உள்ளிட்ட பொருட்களால் தங்களது பெயர் மற்றும் தங்களது காதலன், காதலி பெயரையும் மற்ற சில வாசகங்களையும் எழுதி வைத்துள்ளனர். இதை இங்கு வரும் சிறுவர்கள் படித்து அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பெற்றோர் பதில் சொல்ல முடியாமல் திணறுவதையும் பார்க்க முடிகிறது.
மேலும் சிலர் தாங்கள் கொண்டுவரும் உணவு பொருட்களை கொண்டு சென்று அங்கே வைத்து சாப்பிடும் போது எஞ்சிய சாப்பாடுகளை அங்கேயே போட்டு செல்கின்றனர். இதனால்  துர்நாற்றம் வீசுகிறது. இதனால் மக்கள் கோபுரத்தின் மேலே செல்ல தயங்குகின்றனர்.

நடவடிக்கை எடுக்க வேண்டும்

மேலும் மறைவான இடத்தில் மட்டுமல்லாது சிறுவர்கள், குழந்தைகள் விளையாடும் இடத்திலும் காதலர்கள் அமர்ந்து கொண்டு இழிவான செயல்களில் ஈடுபடுகின்றனர். இந்த செயலை பார்க்கும் சிறுவர்களின் நெஞ்சில் காதல் ஜோடிகள் நஞ்சை விதைக்கின்றனர்.
எனவே இந்த மணிமண்டபத்துக்கு பெற்றோர் தங்கள் குழந்தைகளுடன் எந்தவித தயக்கமும் இன்றி வந்து செல்லும் வகையில் காதல் ஜோடிகள் மீது எந்தவித தயவுதாட்சண்யமும் இன்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Previous Post Next Post

Post Ads 1

Post Ads 2

Travel with us!

News Editor's/Reporter's can join with our Desk Team. Publish your news now on 24×7. Reachout with your contact through editor@ipdtamil.com