நெல்லை:
நெல்லை மாவட்டம் பேட்டை அருகே உள்ள ஆதாம் நகர் குடியிருப்பு பகுதி வழியாக சென்றவர்கள் சடலமொன்று சாலையின் ஓரம் எரிவதை கண்டு பேட்டை காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். உடனே சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் சோதனை செய்ததில், எரிந்துகொண்டிருந்தது வயது முதிர்ந்த பெண்ணின் உடல் என்பதை உறுதி செய்தனர். இதனையடுத்து, பாதி எரிந்த நிலையில் கிடந்த சடலத்தை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். இதனை தொடர்ந்து அப்பகுதியில் உள்ள பொதுமக்களிடம் போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் ஆட்டோவில் மர்ம நபர்கள் சிலர் அப்பகுதிக்குள் வந்து சென்றது தெரியவந்தது.
மாநகராட்சியின் பாதாள சாக்கடை திட்டப் பணிகள் நடைபெற்று வருவதால் சம்பவ இடத்தில் ராட்சத குழாய்கள் போட, குழித்தோண்டி வைக்கப்பட்டும் பொதுமக்கள் குப்பை கொட்டியும் ரனமாய் கிடந்தது. இதனால் ஆட்கள் நடமாட்டம் என்பது அப்பகுதியில் அவ்வளவாக இருக்காது. அப்படி இருக்க எதற்காக ஆட்டோ வந்திருக்கும் என்று போலீசாரின் சந்தேகத்தை தீவிரமடைந்தது. உடனே அப்பகுதியில் வைக்கப்பட்டுள்ள சிசிடிவி கேமிராவை ஆய்வு செய்தனர். ஏரியாவுக்குள் நுழைந்த ஆட்டோவின் பதிவு எண்ணை கண்டுபிடித்து அதன் உரிமையாளரை போலீசார் பிடித்து விசாரித்தனர். நெல்லை பழையபேட்டைச் சேர்ந்த மாரியம்மாள் மற்றும் அவரது சகோதரி மேரி ஆகியோர் அவர்களது பாட்டி சுப்பம்மாளை அழைத்து வந்ததாக தெரிவித்துள்ளார். அதனடிப்படையில் மாரியம்மாள் மற்றும் மேரி இருவரையும் பிடித்து விசாரித்தனர். அதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன. மாரியம்மாளும் மேரியும் மூதாட்டி சுப்பம்மாளின் மகள் வழி பேத்திகள். மேரிதான் கடந்த சிலவருடங்களாக சுப்பம்மாளை கவனித்து வந்திருக்கிறார். அவரால் தொடர்ந்து பராமரிக்க முடியாததால் தனது சகோதரியான மாரியம்மாள் வீட்டில் கொண்டு போய் விட்டார். ஆனால் மாரியம்மாளும் தனது பாட்டியை பராமரிக்க சிரமப்பட்டு வந்தார்.
இந்நிலையில்தான், 2 பேரும் சேர்ந்து சுப்பம்மாளை கொலை செய்ய முடிவெடுத்திருக்கிறார்கள். அதன்படி, கடந்த 3 ந் தேதி ஒரு ஆட்டோவில் மேரி, மாரியம்மாள் இருவரும் சேர்ந்து சுப்பம்மாளை அழைத்துக் கொண்டு ஆதம்நகர் பகுதிக்கு சென்றிருக்கிறார்கள். பின்னர் அங்கிருந்து ஆட்டோவை அனுப்பி வைத்தவர்கள் மூதாட்டியை ஒதுக்குப்புறமான பகுதிக்கு அழைத்து சென்றனர். அங்கு வைத்து தாங்கள் கொண்டுவந்திருந்த மண்ணெண்ணெய் ஊற்றி உயிரோடு தீ வைத்திருக்கிறார்கள்.
உடல் எரிந்து உயிர் பிரிய வலியால் அலறிய சுப்பம்மாள், அப்படியே விட்டுவிட்டு அங்கிருந்து சகோதரிகள் இருவரும் தப்பியோடினர். இந்நிலையில் மாரியம்மாள், மேரி ஆகிய இருவரையும் கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.பராமரிக்க முடியாததால் பாட்டியை பேத்திகளே மண்ணெண்ணெய் ஊற்றி எரித்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.