ஆன்லைன் கேமில் ரூ.50,000 இழப்பு - நீட் தேர்வுக்கு தயாராகி வந்த மாணவர் தற்கொலை..!

தருமபுரி:

தருமபுரி அருகே நீட் தேர்வுக்கு படித்து வந்த மாணவர் ஆன்லைன் கேமில் பணத்தை இழந்ததால் மனமுடைந்து எலி பேஸ்ட் சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளியை அடுத்துள்ள குரும்பட்டி மாரி கொட்டாய் பகுதியை சேர்ந்த பெரியசாமி மகன் வெங்கடேஷ்(வயது 20). இவர் 12-ம் வகுப்பு முடித்து அடுத்ததாக மருத்துவம் படிக்க வேண்டும் எனும் ஆசையில் கடந்த 3 ஆண்டுகளாக நீட் தேர்வுக்கு தயராகி வந்துள்ளார். இதற்கான ஆன்லைன் வகுப்புகள் மற்றும் பயிற்சிகளுக்காக அவருடைய தந்தை புதிதாக ஸ்மார்ட்போன் ஒன்றை வாங்கி தந்துள்ளார்.

முதலில் ஆன்லைன் வகுப்புகள் மற்றும் பாடங்கள் சம்பந்தமான குறிப்புகள் உள்ளிட்டவற்றில் தீவிரமாக படித்து வந்த வெங்கடேஷ் நாளடைவில் அதில் வரும் கேம்கள் உள்ளிட்டவற்றில் ஆர்வம் காட்டத் தொடங்கி உள்ளார். ஒருகட்டத்தில் ஆன்லைன் கேம்களுக்கு அடிமையான வெங்கடேஷ் பணம் செலுத்தி விளையாட ஆரம்பித்துள்ளார். இதன் மூலம் அவரது சேமிப்பு பணம் கரைந்ததை அடுத்து வீட்டில் உள்ள நகைகளை தனியார் அடகு கடையில் வைத்து அந்த பணத்தில் ஆன்லைன் கேம் விளையாடியுள்ளார்.

இப்படியாக அவர் ரூ.50,000 பணத்தை இழந்ததாக கூறப்படுகிறது. இதனால் நகைகளை எப்படி மீட்பது? பெற்றோருக்கு என்ன பதில் சொல்வது? என கடந்த சில நாட்களாகவே அவர் கடும் மன உளைச்சலில் இருந்துள்ளார். இந்த நிலையில் கடந்த 7-ம் தேதி எலி பேஸ்ட் சாப்பிட்டு வெங்கடேஷ் தற்கொலைக்கு முயன்றுள்ளார். வீட்டில் மயங்கி கிடந்த அவரை மீட்ட பெற்றோர் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

கடந்த 5 நாட்களாக அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி வெங்கடேஷ் நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். ஆன்லைன் கேம்கள் மற்றும் சூதாட்டங்களுக்கு தமிழகத்தில் தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் மீண்டும் அந்த தடை விலக்கப்பட்டது. இதன் காரணமாக இளைஞர்கள், மாணவர்கள் என பலரும் ஆன்லைன் விளையாட்டுகளில் பணத்தை இழந்து விரக்த்தியில் தற்கொலை செய்துகொள்ளும் அவலம் தொடர் கதையாகி வருகிறது.

எனவே, இன்று வெங்கடேஷ்க்கு ஏற்பட்ட நிலை வேறு ஒருவருக்கு ஏற்படும் முன் பணம் செலுத்தி விளையாடும் ஆன்லைன் விளையாட்டுகள் மற்றும் சூதாட்டங்களுக்கு தமிழக அரசு தடை விதிக்க வேண்டும் எனபது பெற்றோர்கள் மற்றும் பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Previous Post Next Post

Post Ads 1

Post Ads 2

Kaspersky Premium

Champions don't take risks, why should you?