கோவை மாநகர் மன்ற கூட்டத்தில் அடாவடி செய்த 'பி. ஆர். ஓ'

கோவை:

“வெளிய போ.! எல்லோரையும் அனுப்புங்கப்பா.! “: கோவை மாநகர் மன்ற கூட்டத்தில் அடாவடி செய்த ‘பி. ஆர். ஓ’

கோவை மாநகர் மன்ற கூட்டத்தில் செய்தியாளர்களை செய்தி சேகரிக்கவிடாமல் தடுத்ததோடு, செய்தியாளர்களை தள்ளிவிட்டு அடாவடியில் ஈடுபட்டுள்ளார் மாநகராட்சி மக்கள் தொடர்பு அலுவலர் பாரதிதாசன்.

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டவுடன் பல்வேறு துறைகளிலும் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டனர். இதில், கோவை மாநகராட்சி மக்கள் தொடர்பு அதிகாரியாக இடமாறுதல் பெற்றுவந்தவர் பாரதிதாசன்.

தமிழகத்தின் இரண்டாவது பெரிய நகரமாக உள்ள கோவை மாநகராட்சியின் மக்கள் தொடர்பு அலுவலராக பொறுப்பேற்ற பாரதிதாசன், தான் பொறுப்பேற்றது முதலே மாநகராட்சி குறித்த செய்திகளை சேகரிக்க செல்லும் செய்தியாளர்களிடம் தனது அடாவடித்தனத்தை காட்டி வருகிறார்.

மாநகராட்சி மேற்கொள்ளும் பணிகளை ஊடகங்கள் மூலம் மக்களுக்கு கொண்டு சேர்க்கவேண்டிய பொறுப்பில் இருக்கும் இவர், ஒவ்வொரு நிகழ்ச்சியின் போதும் செய்தியாளர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபடுவது தொடர்கதையாகி வருகிறது.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் தொடங்கி, ஒவ்வொரு நிகழ்ச்சிகளிலும் செய்தியாளர்களுக்கு முட்டுக்கட்டையாக இருக்கும் இவர், தகவல் கோரி அழைக்கும் செய்தியாளர்களை ஒருமையில் பேசுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார். மேலும், கடந்த மார்ச் மாதம் 30ம் தேதி மாநகராட்சி பட்ஜெட் தாக்கலின் போது, பட்ஜெட் புத்தகத்தை ஒரு சில செய்தியாளர்களுக்கு மட்டும் கொடுத்துவிட்டு மற்றவர்களுக்கு கொடுக்க முடியாது என்று கூறி ரகளையில் ஈடுபட்டார்.

இதனிடையே கோவை மாநகராட்சியின் முதல் மாமன்ற கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் மாநகராட்சி கவுன்சிலர்கள் தங்களது வார்டுகளுக்கான கோரிக்கைகளை மேயர் மற்றும் மாநகராட்சி ஆணையர் முன்பாக முன்வைத்தனர். பொதுவாக ஒவ்வொரு மாநகர் மன்ற கூட்டத்தின் போதும் மக்கள் பிரதிநிதிகள் மாநகராட்சி நிர்வாகத்திடம் வைக்கும் கோரிக்கைகளை செய்தியாளர்கள் தாங்கள் சார்ந்த ஊடகங்கள் வாயிலாக மக்களுக்கு கொண்டு சேர்ப்பது வழக்கம்.

அந்த வகையில், விக்டோரியா ஹாலில் செய்தி சேகரிப்பில் ஈடுபட்டிருந்த செய்தியாளர்கள் மற்றும் ஒளிப்பதிவாளர்களை வெளியே அனுப்பும் முடிவுக்கு வந்தார் மக்கள் தொடர்பு அதிகாரி பாரதிதாசன். தொடர்ந்து ஒளிப்பதிவாளர்களை நோக்கி வந்த அவர் “பின்னாடி போ, வெளியே போ. இவங்களை எல்லோரையும் வெளிய அனுப்புங்கப்பா” என்று செய்தியாளர்களை அவமதிப்பு செய்தார்.

இதனால் செய்தியாளர்கள் மற்றும் பாரதிதாசன் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஒவ்வொரு செய்தியாளரையும் பார்த்து “நீ யார்.? எந்த சேனல்? ” என்று கேட்க, “இது தெரியாமல் எதற்கு பி. ஆர். ஓ. , வாக (மக்கள் தொடர்பு அலுவலராக) இருக்கிறீர்கள்? ” என்று செய்தியாளர்களும் கொந்தளித்தனர்.

அரசின் பணிகளை மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்கும் பதவியிலிருந்து கொண்டு மக்களுக்காக செய்தி சேகரிக்கும் செய்தியாளர்களை தரக்குறைவாக நடத்தி, அதிகார துஷ்பிரயோகம் செய்து, புதிய அரசுக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் செயல்படும் இவர் போன்ற அதிகாரிகள் கோவைக்கு தேவையா? என்பதை தமிழக அரசு தான் முடிவு செய்ய வேண்டும்.

                                                                                                                                                               – Saran

Previous Post Next Post

Post Ads 1

Post Ads 2

Kaspersky Premium

Champions don't take risks, why should you?