இசைஞானிக்கு சப்போர்ட் செய்யும் தமிழிசை... மல்லுக்கு நிற்கும் நெட்டிசன்கள்..!

இசைசானி இளையராஜாவுக்கு தமிழர்கள் அனைவரும் ரசிகர்களாக இருக்கின்றனர். அவரது இசை பலரை ஈர்த்தாலும், சமயங்களில் அவரது கருத்து சர்ச்சையாவது உண்டு.

அந்தவகையில் தற்போது அவர் தெரிவித்திருக்கும் கருத்து ஒன்று சர்ச்சையாகி இருக்கிறது. புத்தக முன்னுரை ஒன்றில், “பிரதமர் மோடியின் ஆட்சியை கண்டு அம்பேத்கர் பெருமைப்படுவார்” என இளையராஜா எழுதியிருந்தார்.

சிறுபான்மையினர் மீதான வன்மங்கள் அதிகரித்திருக்கும் பாஜக ஆட்சியை கண்டு அம்பேத்கர் எப்படி பெருமைப்படுவார் என இளையராஜாவை ஒரு தரப்பினர் விமர்சித்துவருகின்றனர். அதேசமயம், இளையராஜா அவருக்கு தோன்றியதை கூறியிருக்கிறார். அவரை விமர்சிப்பது தவறு என மற்றொரு தரப்பினர் கூறிவருகின்றனர்.

இந்நிலையில் தெலங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணை நிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் இளையராஜாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “இணையற்ற இசைஞானி இளையராஜா அவர்கள் பார்புகழும் பாரதப் பிரதமரை அண்ணல் அம்பேத்கருக்கு ஒப்பிட்டு அவர்தம் அடிமனதிலிருந்து வெளிவந்த உணர்வுகளை இங்கே தமிழகத்தில் வெறுப்பு அரசியல் விதைக்கும் சிலர் அவரை சுடு சொற்களால் விமர்சிப்பது சரியா?

“கருத்து சுதந்திரம் சில கருத்துக்களுக்கு மட்டுமா?அல்லது சிலருக்கு மட்டும்தானா? தன் கருத்தை சொல்ல இசைஞானி இளையராஜாவுக்கு முழு சுதந்திரம் உள்ளது என்பதை உரக்கச் சொல்வோம். விழித்துக்கொள் தமிழகமே ” என பதிவிட்டுள்ளார்.

ஆனால் இரண்டு மாநிலங்களுக்கு ஆளுநராக இருந்துகொண்டு அரசியல் உள்நோக்கத்தோடு தமிழிசை சௌந்தரராஜன் ட்வீட் செய்வது ஏற்றுக்கொள்ளத்தக்கது அல்ல என நெட்டிசன்கள் தமிழிசை ட்வீட்டுக்கு பதிலளித்துவருகின்றனர்.

-க. விக்ரம்

Previous Post Next Post

Post Ads 1

Post Ads 2

The Chennai Silks - Let the Celebrations Begin!

Silk Sarees- Buy Pure Silk and Soft Silk Sarees at The SCM Silk