நினைத்தது எல்லாம் நடந்துவிட்டால் - மனம் திறந்து பேசும் முன்பே பாடலால் சூசகமாகப் பதிலளித்த செங்கோட்டையன்!
தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் விலகியது குறித்து கருத்து கூற முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் மறுப்பு தெரிவித்ததோடு, பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்குப் பாடல்மூலம் சூசகமாகப் பதிலளித்து அ.தி.மு.க. வட்டாரத்தில் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளார்.
அ.தி.மு.கப்பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும், கே.ஏ. செங்கோட்டையனுக்கும் இடையே பனிப்போர் நிலவி வருவதாகவும், கட்சியில் தனக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லையென அவர் அதிருப்தியில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதன் காரணமாக, கடந்த 2 மாதங்களுக்கு முன்பு எடப்பாடி பழனிசாமி தொடங்கிய தேர்தல் பிரசாரத்தில் செங்கோட்டையன் பங்கேற்காமல் புறக்கணித்தார்.
நாளை மனம் திறந்து பேசுவேன்
இந்த நிலையில், கோபி அருகே நடந்த ஒரு நிகழ்ச்சியில் பேசிய செங்கோட்டையன், “5-ஆம் தேதி (நாளை) கோபியில் உள்ள புறநகர் மேற்கு மாவட்ட அலுவலகத்தில் ஆலோசனை நடத்தி, அடுத்த கட்ட நடவடிக்கைகுறித்து மனம் திறந்து பேச உள்ளேன்” என்று கூறியிருந்தார்.
இதற்கிடையில், ஈரோடு பகுதியில் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட அ.தி.மு.க. நிர்வாகி ஒருவரைப் பார்க்க நேற்று இரவு சென்ற அவரிடம், பத்திரிகையாளர்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பினர். அதற்கு, "5-ஆம் தேதி சொல்கிறேன்" என்று ஒற்றை வரியில் பதிலளித்தார்.
தொடர்ந்து கேள்விகள் கேட்கப்பட்டபோது, "நினைத்தது எல்லாம் நடந்து விட்டால் தெய்வம் ஏதுமில்லை, நடந்ததையே நினைத்து இருந்தால் அமைதி என்றுமில்லை" என்ற சினிமா பாடலைப் பாடிவிட்டுப் புறப்பட்டுச் சென்றார். அவரது இந்தப் பாடல் அ.தி.மு.க.வினர் மத்தியில் மேலும் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது. நாளை அவர் என்ன பேசப்போகிறார் என்ற ஆர்வம் தமிழக அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது.