துபாயில் இருந்து கடத்தி வரப்பட்ட தங்கம் மாயம்: குருவியாக செயல்பட்ட இளைஞருக்கு சித்திரவதை @ சென்னை | Rs 2 crore of gold smuggled from Dubai has gone missing

சென்னை: துபாயில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.2 கோடி மதிப்பிலான தங்கம் மாயமானன நிலையில், குருவியாக செயல்பட்ட இளைஞர் லாட்ஜில் அடைத்து வைத்து 4 மாதங்களாக சித்திரவதை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் வருகபலை கிராமத்தைச் சேர்ந்த சாஜி மோன்(32) என்பவரை கடந்த நான்கு மாதங்களாக திருவல்லிக்கேணி வெங்கடேசன் தெருவில் உள்ள லாட்ஜில் அடைத்து வைத்து இருப்பதாக திருவல்லிக்கேணி போலீஸாருக்கு நேற்று ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து திருவல்லிக்கேணி சட்டம் – ஒழுங்கு காவல் ஆய்வாளர் பிரகாஷ் தலைமையிலான போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று சாஜி மோனை மீட்டுள்ளனர். அவரிடம் நடத்திய விசாரணையில் தெரியவந்ததாவது; சாஜி மோன் துபாயில் எலக்ட்ரீசியன் வேலை செய்து வந்துள்ளார்.

ரம்ஜான் நேரத்தில் சரியான வேலை இல்லாததால் துபாயில் பழக்கமான பென்னி, மாலிக் ஆகியோரிடம் வேறு ஏதாவது வேலை இருக்கிறதா என கேட்டுள்ளார். அதற்கு, குருவி வேலை (சட்ட விரோதமாக பொருட்களை கடத்தி வருபவர்) இருக்கிறது செய்கிறாயா என்று இருவரும் கேட்டுள்ளனர்.

கொடுக்கும் பொருட்களை பத்திரமாக கொண்டு போய் சேர்த்தால் சென்னையில் இருக்கும் எங்கள் தொழில் கூட்டாளிகள் ரூ.5 லட்சம் தருவார்கள் என அவர்கள் இருவரும் சாஜி மோனுக்கு ஆசை வார்த்தை கூறியுள்ளனர். இதற்கு சாஜி மோன் ஒப்புக்கொண்டு நான்கு மாதங்களுக்கு முன்பு துபாயிலிருந்து 3 தங்க கட்டிகளை ( ரூ.2 கோடி மதிப்பிலானது என கூறப்படுகிறது) ஆசனவாய் வழியாக உடலில் மறைத்து வைத்து சென்னை விமான நிலையத்துக்கு கொண்டு வந்து, காத்திருந்துள்ளார்.

இந்த நிலையில், சாஜி மோன் கொண்டு வந்த தங்கக் கட்டிகளை வாங்கி செல்வதற்கு தயாராக இருந்த நான்கு பேர் அவரை சேப்பாக்கம் வெங்கடேசன் தெருவில் உள்ள லாட்ஜுக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு வந்து பார்த்தபோது சாஜி மோனிடம் தங்கக் கட்டிகள் இல்லை.

சாஜி மோனிடம் கேட்டபோது, சென்னை விமான நிலையத்தில் உங்கள் பெயரைச் சொல்லி மற்றொரு கும்பல் தங்கக் கட்டிகளை வாங்கிச் சென்று விட்டது என சாஜி மோன் முதலில் கூறியதாக தெரிகிறது. அதன்பிறகு, சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை கடுமையாக இருந்ததால் விமான நிலைய கழிப்பறையில் வைத்து விட்டேன் என மாற்றிச் சொன்னதாகவும் தெரிகிறது.

இதனால் ஆத்திரமடைந்த அந்தக் கும்பல், கடந்த நான்கு மாதங்களாக சாஜி மோனை சேப்பாக்கம் லாட்ஜில் அடைத்து வைத்து அடித்து துன்புறுத்தியதாக தெரிகிறது. இதனால் சாஜி மோனுக்கு கண்களுக்கு கீழ் ரத்தக் காயம் மற்றும் வீக்கம், உள்ளங்கைகளில் தீக்காயம், முதுகில் காயத் தழும்பு ஆகியவை ஏற்பட்டுள்ளது.

போலீஸ் விசாரணையில் இத்தனை விவகாரங்களும் தெரியவந்ததை அடுத்து சாஜி மோனை ஓமாந்தூரார் அரசு மருத்துவமனையில் போலீஸார் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக சேப்பாக்கத்தைச் சேர்ந்த ஆசிப் பயஸ்( 23 ), அண்ணா சாலை முகமது ஆலிம் ஆப்கான்(28), ஒடிசாவைச் சேர்ந்த வருந்தரதாஸ்(40), மதுரையைச் சேர்ந்த கோபி கண்ணன்(36) ஆகிய நான்கு பேரை போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். தலைமறைவாக உள்ள லாட்ஜ் உரிமையாளர் இம்ரான் (28) என்பவரும் போலீஸாரால் தேடப்பட்டு வருகிறார்.

Source link

Previous Post Next Post

Post Ads 1

Post Ads 2

The Chennai Silks - Let the Celebrations Begin!

Silk Sarees- Buy Pure Silk and Soft Silk Sarees at The SCM Silk